ADVERTISEMENT

“நீட் தேர்வு ரத்து குறித்து அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்டன” -  ஒ.பி.எஸ் 

12:40 PM Feb 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.

மொத்தம் 13 சட்டமன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று கூடிய கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய மூன்று கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்திற்கான தேதியை சபாநாயகர் அப்பாவு விரைவில் அறிவிப்பார் என்று கூட்டம் முடிந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ், அதற்கான காரணத்தையும், நீட் விலக்கில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் விவரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “நீட் தேர்வு ரத்து தொடர்பான அனைத்து சட்டப்படியான நடவடிக்கையும் அதிமுக ஆதரிக்கும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு ரத்து குறித்து அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்டன. சட்டமன்றம், அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அக்கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT