Skip to main content

“ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

He who is in charge of governing speaks irresponsibly  Chief Minister M.K.Stalin

 

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் (வயது19) என்பவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதையடுத்து இன்று காலை இது குறித்து மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும், எப்போதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சியில்தான் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அனுப்பி வைக்கும் போது காலம் கடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அதனை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணம் ஆகும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 77வது சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்தவே. போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

 

He who is in charge of governing speaks irresponsibly  Chief Minister M.K.Stalin

 

விடுதலை அடைவதற்கு முன்பே, 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி பாரதியார். விடுதலை பெற்ற இந்தியாவானது, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத்தான் இருக்கும் என்று அந்தத் தமிழ்க்கவி கனவு கண்டார். நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

 

அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாகத் தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது. ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். 'நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்' என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.

 

He who is in charge of governing speaks irresponsibly  Chief Minister M.K.Stalin

 

தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், 'அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை' என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன். ஆளுநர் அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திமுக தான்.

 

பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.