ADVERTISEMENT

கோடநாடு விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

03:18 PM Sep 09, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானிய கோரிக்கைகள் மீதான இன்றைய விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. பிறந்தநாள் விழாவின்போது ரவுடி கத்தியால் கேக் வெட்டியது அதிமுக ஆட்சியில்தான்" என்றார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் கூடும்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும். கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின்போது முதலமைச்சராக இருந்த இ.பி.எஸ். என்ன செய்தார்? கொலை, கொள்ளை நடந்த கோடநாடு சாதாரண இடமில்லை; அந்தக் குற்றங்களை எதில் சேர்ப்பது? குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயர் இருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டுவந்தார். ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது? கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனியாரிடம் சென்ற கோடநாடு சொத்துக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்" என கேள்வி எழுப்பினார்.

கோடநாடு விவகாரம் காரணமாக, சட்டப்பேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் அனல் பறந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT