ADVERTISEMENT

“நான் ஒரு இந்து என்பதில் தெளிவாக இருக்கிறேன்!”-சர்ச்சையே உன் பெயர்தான் ராஜேந்திரபாலாஜியா? (EXCLUSIVE)

10:39 PM Oct 19, 2019 | kalaimohan

ரஷோமோனின் திரைக்கதை உத்தியைத்தான் விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசன் கையாண்டிருப்பார். அத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான விருமாண்டியும் கொத்தாளனும் ஒரே கதையை வெவ்வேறு விதமாகச் சொல்வார்கள். இருவருமே, உண்மைகளை வைத்தே சொல்வார்கள். ஆனாலும், ஒரு கதாபாத்திரத்தின் வாக்குமூலத்தில் ‘பொய்’ நிறைந்திருக்கும். இதுபோன்ற ஒரு கதைதான்.. இல்லை.. ஒரு சம்பவம்தான் நாங்குநேரியில் நடந்திருக்கிறது.

ADVERTISEMENT

ஆம். ஏதோ நடந்திருக்கிறது. அந்த ‘ஏதோவை’ இரு தரப்பினரும் வெவ்வேறு விதமாகச் சொல்கின்றனர். அப்படியென்றால், நடந்தது என்ன? நியாயமான பதில், சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே உள்ளது. யார் அந்த இரு தரப்பினர்?

நாங்குனேரி தொகுதியிலுள்ள கருவேலங்குளத்தில் ஒரு வீடு எடுத்துத் தங்கி தேர்தல் பணியாற்றுகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. கோரிக்கை மனுவோடு அவரைச் சந்திக்கச் சென்றனர் கேசவநேரி கிராமத்தினர். அமைச்சரும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலரும்தான் இங்கே இரு தரப்பினர்.

ADVERTISEMENT

ரேஷன் கடை வேண்டும் என கோரிக்கை மனு எழுதி கையோடு எடுத்துச் சென்ற கேசவநேரி கிராமத்தினர் இப்படி சொல்கின்றனர் -

“காலை 10-30 மணிக்கு அமைச்சரை சந்தித்தோம். எங்களிடம் அவர், ‘நீங்கதான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்களே. நாங்க எதுக்கு உங்களுக்கு பண்ணித் தரணும்? மனுவைக் கொண்டுபோய் திமுக எம்.பி.கிட்ட கொடுங்க. முஸ்லீம்களும் ஓட்டு போட மாட்டீங்க. கிறிஸ்தவர்களும் ஓட்டு போட மாட்டீங்க. பி.ஜே.பி. கூட்டணிங்கிறதுனால இப்படி பண்ணுறீங்க. இப்படியே எங்களை புறக்கணிச்சிக்கிட்டிருந்தா.. ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கிவச்ச மாதிரி தமிழ்நாட்டுலயும் ஒதுக்கி வைக்கிற நெலம வந்திரும். வெறும் அஞ்சு பெர்சன்ட் ஓட்டு வச்சிருக்கிற உங்களால அதிமுகவ எதுவும் பண்ணமுடியாதுன்னாரு. அவரு எங்ககிட்ட ஒரு அமைச்சர் மாதிரியே பேசல.” என்கிறார்கள் குமுறலோடு.

‘ஒரு அமைச்சராக இருந்தும் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையில் நடந்துகொண்டதாக குற்றசாட்டு எழுந்திருக்கிறதே? பரவலாக கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கின்றீர்களே?’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமே கேட்டோம்.

“நான் தங்கியிருக்கிற இடத்துல இருந்து நைட் 9 மணிக்கு மேல ரவுண்ட்ஸ் போவேன். திரும்புறதுக்கு 11 ஆயிரும். நைட்டுங்கிறதுனால என்கூட ரெண்டு வண்டிதான் வரும். அன்னைக்கும் அப்படித்தான் கிளம்பினேன். மூணுபேர் இருப்பாங்க. கையக் காட்டி நிப்பாட்டினாங்க. என்கிட்ட ஏதோ சொல்ல வந்தாங்க. போய் சாப்பிடுங்க. காலைல பேசிக்கலாம்னு சொன்னேன். இப்பதான் உங்க வீட்ல சாப்ட்டோம்னு சொன்னாங்க. ஆளுங்கள பார்த்தாலே சண்டைக்கு வர்ற மாதிரி இருந்துச்சு. நான் காரை விட்டு இறங்கல. அப்புறம் அவங்க ‘எங்க பகுதிக்கு ரேசன் கடை வேணும்’னாங்க. ரேசன் கார்டு எத்தனை இருக்கும்னு கேட்டேன். ‘நாப்பது, அம்பது வீடு இருக்கும்’னாங்க. 50 வீட்டுக்கு எப்படி கொடுப்பாங்க? 500-ன்னா ஒரு பகுதியா கொடுப்பாங்க. இல்லைன்னா 300 வீடாச்சும் இருக்கணும்னு சொன்னேன். நான் பேசிக்கிட்டிருக்கும்போதே காருக்குள்ள ஒருத்தர் கைய விட்டாரு. நான் இது சரியில்லைன்னு சொன்னேன். ‘நீ யாரு இதைச் சொல்ல’ன்னு ஒருமாதிரி பேசினார். நானும் நெலமய தெரிஞ்சுக்கிட்டு.. நீங்க மொதல்ல தாசில்தார்கிட்ட மனு கொடுங்க. மனுவோட நகலை என்கிட்ட கொடுங்க. வாய்ப்பு இருந்தா.. பண்ணித் தர்றேன்னு சொன்னேன். அதுக்கு அவங்கள்ல ஒருத்தர் ‘அப்படின்னா நீ செய்ய மாட்டல்ல’ என்று வாதத்தை இழுத்து பிரச்சனை பண்ணுனார். அப்ப அவங்க கையில மனு எதுவும் இல்ல. ஒருவேளை அன்னைக்கு நான் இறங்கி பேசியிருந்தேன்னா.. கை நீட்டி அடிச்சேன்னு பெரிய கலவரமே பண்ணிருப்பாங்க.


நான் மோடியை டாடிங்கிறேன்ல. அவர் ஒரு ஸ்டண்ட் மாஸ்டருன்னு சொன்னேன்ல. பிஜேபிக்கு ஆதரவா பேசுறேன்ல. இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டுத்தான், ராத்திரி 9 மணிக்கு நான் கிளம்புறப்ப சண்டை இழுத்துறலாம்னு கணக்கு போட்டு அவங்க வந்திருக்காங்க. அப்படித்தான் நினைக்கத் தோணுது. இல்லைன்னா.. நடக்காத ஒரு விஷயத்தை.. நான் பேசாத வார்த்தைகளை.. அப்படித்தான் பேசினாருன்னு இவ்வளவு வேகமா ஸ்டேட் முழுக்க செய்தி பரப்பிருப்பாங்களா? அப்படி பேசினேன்னு பொய்த் தகவலைச் சொல்லுறாங்கள்ல. அதுக்கு ஆதாரமா வீடியோ இருக்கா? ஆடியோ இருக்கா? இப்பத்தான் எல்லாரு கையிலயும் செல்போன் இருக்குல்ல. நான் அப்படி பேசியிருந்தா ரெகார்ட் பண்ணாம விடுவாங்களா? இப்படி ஆதாரமே இல்லாத பொய்யான ஒரு குற்றச்சாட்டுக்கு தலைவர்களெல்லாம் கண்டனம் தெரிவிக்கிறதை நான் என்னன்னு சொல்லுறது? நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?

நான் மாவட்ட செயலாளரா இருக்கிற விருதுநகர் மாவட்டத்துல இஸ்லாமிய சகோதரர்கள் எத்தனை பேருக்கு பொறுப்பு கொடுத்திருக்கேன் தெரியுமா? நகர செயலாளர்ல இருந்து கூட்டுறவு சங்க தலைவர் வரைக்கும் முக்கிய பொறுப்பெல்லாம் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கேன். மாவட்ட அளவுல பொறுப்பு கொடுத்திருக்கேன். எங்க மாவட்டத்துல ஜமாத்துகாரங்க நானெல்லாம் எப்பவும் ஒண்ணாத்தான் இருப்போம். உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவோம். இப்பக்கூட ஒரு ஜமாத்காரர் மெக்காவுல இருந்து வந்து புனித தண்ணி கொடுத்துட்டு என்கூட நின்னு போட்டோ எடுத்துட்டு போறாரு. முஸ்லீம் சகோதரர்கள் எவ்வளவு அன்பா பழகுவாங்க தெரியுமா? நாங்குநேரி பிரச்சனைக்குப் பின்னால நிச்சயமா திமுகவும் காங்கிரஸும் இருக்கும். ஒட்டுமொத்த சிறுபான்மையினர் வாக்குகளையும் அவங்க பக்கம் திருப்புறதுக்கு நடத்தின நாடகமாத்தான் தெரியுது. இல்லைன்னா.. வேணும்னே பிரச்சனை பண்ணி.. அதை ஒரே நாள்ல இவ்வளவு வேகமா ரீச் பண்ண வச்சிருப்பாங்களா?

இயேசு விடுவிக்கிறார் 40-வது ஆண்டுவிழா.. அந்த நாலுமாவடி கிறிஸ்தவ மாநாட்டுல நான் பேசிருக்கேன். எனக்கு அல்லாவும் ஒண்ணுதான். ஏசுவும் ஒண்ணுதான். மரியாவும் ஒண்ணுதான். மாரியும் ஒண்ணுதான். எங்கே போனாலும் நல்லது நடந்தா போதும்னு சாமி கும்பிடுவேன். அதே நேரம், நான் இந்துங்கிறதுல தெளிவா இருப்பேன். இந்து அடையாளத்தை மறைச்சிட்டு நோன்பு கஞ்சி குடிக்க மாட்டேன். அப்பக்கூட என் நெற்றியில குங்குமம் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் என்னோட பாலிசியை மாத்திக்க மாட்டேன். இப்பக்கூட ஃபாரின் போயிருந்தப்ப, சூட் போட்டுக்கங்க.. கோட் போட்டுக்கங்க.. போட்டோ எடுக்கணும்னு சொன்னாங்க. உடம்பு தாங்காது குளிரும்னாங்க. நான் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வேட்டி சட்டையே போதும். குளுந்தா குளுந்துட்டு போகணும்னு சொல்லிட்டேன். நான் இயல்பா பேசுறவன்; நடந்துக்கிறவன். உள்ள ஒண்ண வச்சிக்கிட்டு வெளில ஒண்ண பேசமாட்டேன். என் பேச்சு உதட்டளவுல இருக்காது. உள்ளேயிருந்துதான் வரும். அரசியல்ல இருந்துக்கிட்டு இந்தமாதிரி இருக்கக்கூடாது.. இதெல்லாம் தப்புன்னு எனக்கு பாடம் நடத்த நினைச்சா.. அது நடக்காது. நான், நானாவே இருந்துட்டு போறேன்.


‘அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, முஸ்லீம் நீங்கள்லாம் ஓட்டு போட மாட்டீங்க; கிறிஸ்டின் நீங்கள்லாம் ஓட்டு போட மாட்டீங்கன்னு எப்படி நான் சொல்லிருப்பேன்?” என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.

நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்த அந்த விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் நம்மிடம் “மத்த அமைச்சர்கள் மாதிரி சத்தியமா இவரு இல்ல. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான். இப்பக்கூட பாருங்க. நாங்குநேரில வேற எந்த அமைச்சரும் தொகுதில தங்கல. அட, திமுகவுல இருக்கிற முன்னாள் அமைச்சர்களும்கூட திருநெல்வேலில தங்கியிருந்துதான் வந்துவந்து தேர்தல் வேலை பார்க்கிறாங்க. எங்க மாவட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆரும் அப்படித்தான் வந்து போறாரு. ராஜேந்திரபாலாஜி மட்டும்தான் கருவேலங்குளம்கிற ஒரு கிராமத்துல தங்கியிருந்து கட்சி வேட்பாளர் ஜெயிக்கணும்னு ராத்திரி பகலா முழுமூச்சா வேலை பார்க்கிறாரு. எங்க மாவட்டத்துலயும் சரி, இந்தத் தொகுதிலயும் சரி, கட்சிக்காரனோ, பப்ளிக்கோ யாரு கேட்டாலும் சொந்தப் பணத்தை வாரியிறைப்பாரு. போகும்போது என்னத்த கொண்டு போகப்போறோம்கிறது அவரோட பாலிசி. பணம் இருக்கிறவனோ, இல்லாதவனோ எல்லாரும் ஒண்ணுதான். ராத்திரி நாலு இட்லியோ, நாலு புரோட்டோவோ, மிஞ்சிப்போனா கூட ஒண்ணு ரெண்டோ சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சிரும். எல்லாரு வயிறும் ஒண்ணுதான்னு பேசுவாரு. பேசுற மாதிரியே நடந்துக்குவாரு. ஆனா.. வாய் கொஞ்சம் நீளம். என்ன பேசுறோம்னு தெரியாம எதையாச்சும் பேசிருவாரு. ‘எல்லாரு மாதிரியும் நானும் கம்முன்னு இருக்க மாட்டேன். பதிலடி கொடுத்தே ஆகணும். எந்தக் கேள்வியையும் எதிகொள்ளணும். இல்லைன்னா.. தொண்டன் சோர்ந்துபோவான்’னு சொல்லுவாரு. பாருங்க.. இப்பக்கூட ஒரு கட்சித் தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு மீடியாகிட்ட, எம்.ஜி.ஆர். மாதிரியே ராஜேந்திரபாலாஜியும் ஒரு வள்ளல்தான். அவரை நான் எம்.ஜி.ஆராவே பார்க்கிறேன்னு பேட்டி கொடுத்துட்டாரு. அவ்வளவுதான்.. ராஜேந்திரபாலாஜி பப்ளிசிடி தேடிக்கிறார்ன்னு அமைச்சர்கள் மத்தியில புகைச்சல் ஆயிருச்சு. எடப்பாடி மேல ரொம்ப விசுவாசமா இருப்பாரு. ஆனா.. சி.எம்.மை சுத்தி ஒரு வட்டம் இருக்கு. அதுல இருக்கிற யாருக்கும் ராஜேந்திரபாலாஜிய பிடிக்காது. அரசியல்ல.. நல்லது பண்ணுனாலும் கெட்ட பேர்தான் வரும்னு தெரிஞ்சுதான் அரசியல்வாதிகளில் பலரும் பெரிசா எந்த நல்லதும் பண்ணுறதில்ல. ராஜேந்திரபாலாஜிய இந்த அரசியல் நல்லாவே உருட்டி விளையாடுது.” என்று பெருமூச்சு விட்டார்.

பழைய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது -
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல!
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியல!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT