ADVERTISEMENT

விராலிமலை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்... சாலை மறியல், தடியடி..!

10:45 AM May 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுக வேட்பாளராக பழனியப்பனும் போட்டியிட்ட நிலையில், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கும்போது ஒரு விவி பேடில் கட்டப்பட்டிருந்த நாடா பாதுகாப்பு அறைக்கு வெளியே கிடந்ததால் அப்போதே சந்தேகத்தைக் கிளப்பிய திமுகவினர் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முதல் சுற்றில் ஒரு இயந்திரம் எண் மாறியுள்ளதை திமுகவினர் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், தேர்தல் பார்வையாளர் சமாதானம் செய்து 2வது சுற்று எண்ணிக்கையை தொடங்கியபோது 3 இயந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டு, பெட்டி எண் மாறியுள்ளதால் திமுகவினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தச் சொன்னார்கள். இதனால் சுமார் 4 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர்.

தொடர்ந்து மாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் அதேபோல சில வாக்கு பெட்டிகளில் சணல் மூலம் கட்டப்பட்டிருந்தது. மீண்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினார்கள். இதனால் 6 சுற்றுகளோடு வாக்கு எண்ணிக்கை இரவு 7.30க்கு நிறுத்தப்பட்டதோடு, நள்ளிரவு கடந்தும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் தெண்டாயுதபாணி கூறும்போது, “இரவு உணவுக்காக நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கும்” என்றார். ஆனால் தொடங்கவில்லை. இயந்திரங்களில் எண்கள் மாறியது பற்றி விளக்கம் தெரிவித்தால் மட்டுமே எண்ணிக்கையைத் தொடங்கலாம் என்று திமுக வேட்பாளர் தரப்பினர் கறாராக கூறிவிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர், “தபால் ஓட்டுகளில் 1,040 ஓட்டுகளை, ஓரத்தில் ஏதோ எண்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்துள்ளனர். அவற்றை எண்ண வேண்டும் என்று கூறிய விஜயபாஸ்கர் இதே போல திருமயம், புதுக்கோட்டை தொகுதிகளிலும் பிரச்சினை உள்ளதாக கூறி திருமயம் வாக்கு எண்ணும் மையத்திற்கும் சென்றதால், திமுகவினர் வாக்கு எண்ணும் மையம் முன் கூச்சல் போட்டனர். அப்போது அதிமுகவினர் ஏதோ சொல்ல, அந்த அதிமுக பிரமுகரை திமுகவினர் கூடி தாக்கினார்கள். அதன் பிறகு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் விஜயபாஸ்கர் செல்ல முயன்றபோது, மாற்றுத் தொகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கூறி விஜயபாஸ்கரை மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில் விராலிமலை வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரி வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் சாலையில் மறியல் செய்து கூச்சல் போட்டதால் போலீசார் தடுக்க நினைத்தனர். அப்போது தடியடி நடத்திய போலீசார், வேகமாக பேசிய ஒரு இளைஞரை இழுத்துச் சென்று வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். நள்ளிரவை கடந்தும் விராலிமலை தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT