ADVERTISEMENT

"சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லை"! - கே.பி.முனுசாமி பேட்டி!

06:31 PM Feb 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி எம்.பி., நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சசிகலா மீது அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தியதாகப் புகார் அளித்தனர்.

அதன் பின்னர் அமைச்சர்கள், நிர்வாகிகள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி எம்.பி., "அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளோம். அ.தி.மு.க. கொடியைக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவிர யாரும் பயன்படுத்தக் கூடாது எனப் புகார் செய்துள்ளோம். அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.க. கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க புகாரில் கோரப்பட்டுள்ளது. சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல; அவர் அ.தி.மு.க. கொடியை எப்படி பயன்படுத்தலாம்? கட்சியின் விதிப்படி ஏற்கனவே உறுப்பினராக இருந்தாலும், உறுப்பினராகப் புதுப்பித்தல் செய்ய வேண்டியது அவசியம்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சசிகலா, டிடிவி தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடியானது. ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க.வுக்குதான் இரட்டை இலை எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் போகவேண்டும் என்றால் ஐ.நா. சபைக்குத்தான் செல்லவேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT