ADVERTISEMENT

அ.தி.மு.க.வை ஈர்த்த 'ஒன்றிணைவோம் வா'... சேலத்தில் முகாம் மாறிய ர.ர.க்கள்!!

07:22 AM May 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலத்தில், 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் தி.மு.க.வினர் மேற்கொண்டு வரும் கரோனா நிவாரணப் பணிகளால் ஈர்க்கப்பட்ட அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

ADVERTISEMENT


எந்த ஓர் அசாதாரண சூழ்நிலைகளையும் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதில் அரசியல்வாதிகள் எப்போதும் கெட்டிக்காரர்கள். கரோனா வைரஸ் ஊரடங்கு, விளிம்பு நிலை மக்களை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டிருக்கும் இவ்வேளையில், ஆளுங்கட்சியைவிட தி.மு.க. மிகச்சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பொதுமுடக்கத்தால் வேலையையும், வருவாயையும் இழந்து அடுத்தடுத்த நாள்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களைத் தேடித்தேடிச்சென்று, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது தி.மு.க.. இதற்காகவே, 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கட்சித் தலைமை இப்படி ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் கரோனா நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கி இருந்தனர்.


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளிலும் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை அழைத்துக்கொண்டு கரோனா நிவாரண உதவிகளை வழங்குவதில் றெக்கை கட்டிப் பறந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்களை கட்சி சார்பின்றி வழங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் விஜயகுமார் தரப்பினர். இத்தொகை அவரின் தனிப்பட்ட பங்களிப்பு என்றும் கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வினர் ஒரே ஒருமுறை மட்டும் பெயரளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசியும், மளிகைப் பொருளையும் கொடுத்துள்ளதாகக் கூறும் அக்கட்சியினர், கொரோனா ஊரடங்கு போன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆளுந்தரப்புதான் இன்னும் அதிகமாகச் செய்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கூறினர்.


மக்களின் இந்த எதிர்பார்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க., ஆளுங்கட்சியினர் ஊராட்சிமன்றத் தலைவர்களாக இருக்கும் கிராமங்களிலும் தயக்கமின்றி நிவாரணப் பொருள்களை வழங்கினர். வழக்கமான காய்கறிகளுடன் சீசனுக்கேற்ற தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பழங்களையும் கொள்முதல் செய்து வழங்கியிருக்கிறார்கள்.

தி.மு.க.வின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ், கரோனா நிவாரண உதவிகள் கிடைக்கப்பெற்றதில் ஈர்க்கப்பட்ட அ.தி.மு.க., தே.மு.தி.க. பிரமுகர்கள் 100 பேர், மே 25- ஆம் தேதி, அக்கட்சிகளில் இருந்து விலகி, ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இவர்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆச்சாங்குட்டப்பட்டி பால் கூட்டுறவு சங்கத் தலைவரும், கிளைச்செயலாளருமான சகாதேவன், தே.மு.தி.க. செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.


பால் கூட்டுறவு சங்கத் தலைவரான சகாதேவன் தன் உறவுக்காரர்கள், ஊர்க்காரர்களுடன் தி.மு.க.வில் ஐக்கியமானது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மணி, மெடிக்கல் ராஜா ஆகியோர் சகாதேவனை மீண்டும் அ.தி.மு.க.வுக்குள் இழுக்க அன்றைய தினம் மாலையில் இருந்து பல முயற்சிகள் நடந்துள்ளது. ஆளுங்கட்சித் தரப்பினரின் முயற்சிகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சகாதேவன்.

இதுபற்றி சாகாதேவனிடம் கேட்டபோது, ''கரோனா ஊரடங்கு போட்டதற்கு அடுத்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த ஒன்றியம் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் தி.மு.க.வினர் கட்சி சார்பில்லாமல் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆளுங்கட்சியில், பால் கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருந்தும்கூட என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதை, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் தி.மு.க. செய்கிறது.

எங்கள் ஊரில் துப்புரவு தொழிலாளர்களை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவே இல்லை. தி.மு.க.வினர் அவர்களுக்கு தரமான அரிசி, மளிகைப் பொருள்கள், மாஸ்க், கையுறைகள் எல்லாம் கொடுத்தனர். இந்தப் பணிகளைப் பார்த்துதான் நானாக தி.மு.க.வில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அதேநேரம், என்னைப்போல் ஈர்க்கப்பட்ட அ.தி.மு.க.வினர் பலரும் என்னுடன் தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.


நான் தி.மு.க.வில் இணைந்து கொண்டதை அறிந்ததும், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்கள் என்னை நேரில் சந்தித்தும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்து கொள்ளுமாறு சமாதானம் செய்தனர். என்னைக் கட்டாயப்படுத்தி ஒன்றியச் செயலாளரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே இனி தி.மு.க.வில்தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு வண்டியை மடக்கிக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்,'' என்றார்.

இதுபற்றி அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம் பேசினோம். ''கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி கட்சித்தலைமை சொல்லி இருக்கிறது. அதைத்தான் எந்த வித எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறோம். ஆளுங்கட்சிதான் 1,000 ரூபாய் நிவாரண நிதியுதவியுடன் மக்களை அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டனர். அன்றாடம் வேலைக்குப் போனால்தான் வீட்டில் அடுப்பெரிக்க முடியும் என்ற நிலையில் உள்ளவர்களை அ.தி.மு.க. அரசாங்கம் மறந்தே விட்டது. அப்படியான சாமானிய மக்களை நாங்கள் தேடிச்சென்று உதவிகளை வழங்குகிறோம். இது போன்ற உதவிகளால் ஈர்க்கப்பட்டுதான் சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை,'' என்கிறார் விஜயகுமார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT