ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

04:39 PM Feb 22, 2024 | prabukumar@nak…

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அதனைத் தொடர்ந்து 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT