Skip to main content

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கீடு!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Vice President of Opposition seat R.P. Reservation for Udayakumar
கோப்புப்படம்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (12.02.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 2 வது நாளான நேற்று (13.02.2024) மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக  4 முறை சபாநாயகரை சந்தித்தும், பல முறை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்தும் கடிதங்களை வழங்கி இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகே அமைக்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க.விற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி. உதயகுமாருக்கு சபையில் இடம் ஒதுக்கி தருவது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு சபாநாயகர் அப்பாவும், இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகருக்கு உரிய உரிமை என்று கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பல முறை கோரிக்கை விடுத்து வருகிறார். ஏற்கெனவே சட்டப்பேரவையில் தலைவராக இருந்த தனபால் இருக்கை விவகாரத்தில் என்ன தீர்ப்பு அளித்தாரோ அதனைச் சுட்டிக்காட்டி சபாநாயகர் அப்பாவு பதில் சொல்லி வருகிறார். இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ள, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சபாநாயகரை உரிமையுடன் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, “எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Vice President of Opposition seat R.P. Reservation for Udayakumar

இந்நிலையில் முதல்வரின் கோரிக்கையையடுத்து இது குறித்து சபநாயகர் அப்பாவு மறு பரிசீலனை செய்தார். அதன்படி எடப்பாடி பழனிசாமி அருகே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி அருகே அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள் சபநாயகர் தனபால் இருக்கைக்கு அருகே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.