ADVERTISEMENT

மனிதனை முடக்கிப் போடும் போதை! கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன்! 

03:22 PM Mar 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“மேடம் இந்த வாட்டி குறி தப்பாது. கவனமாக மூவ் பண்ணீங்கன்னா மொத்த அயிட்டத்தையும், கடத்தல்காரர்களையும் அமுக்கிறலாம்” என தன்னுடைய ஸோர்ஸ் கொடுத்த பல நாள் வேவுத் தகவலில் பக்கா ஸ்கெட்ச்சுடன் தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவின் 10 பேர் கொண்ட பிரிவு மாவட்டத்தின் விளாத்திகுளம் பக்கமுள்ள வேம்பார் கடல் பகுதிக்கு அதிகாலையில் விரைந்திருக்கிறது. க்யூ பிரிவு வருவதை அறிந்த அந்த கடத்தல் கும்பல் படகில் கடலுக்குள் புகுந்திருக்கிறார்கள்.

விடாத க்யூ பிரிவு டீம், இரண்டு விசைப்படகில் அந்தக் கடத்தல் படகை 9 நாட்டிங்கல் மைல் தூரம் வரை பின்தொடர்ந்து சுற்றி ரவுண்ட் கட்டியுள்ளது. தப்ப வழியில்லாமல் வழிமறிக்கப்பட்டப் படகை சோதனை போட்டதில், மேல்தட்டில் எதுவும் கிடைக்காமலிருக்க அயராத டீம் படகின் அடித்தட்டை உடைத்து சோதனையிட்ட போது ஐஸ் போன்ற கட்டிகளைக் கொண்ட முழுமையாக பேக் செய்யப்பட்ட 5 பேக்கேஜ்கள் கிடைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடை என மொத்தம் 10 கிலோ எடையுள்ள கற்கண்டு தோற்றத்திலான அந்தப் பொருளை கைப்பற்றிய க்யூ பிரிவு, படகுடன் சிக்கிய ஏழு நபர்களையும் தங்களின் கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறது.

விசாரணையில் அந்த ஏழு நபர்களும் விளாத்திகுளம் பக்கமுள்ள கீழ வைப்பாறின் சிலுவை வின்ஸ்டன், கபிலன், சுபாஷ், அஸ்வின், கிங்பன், சைமன் என்பது தெரியவந்தது.

பிடிப்பட்ட அவர்கள் க்யூ பிரிவுத்துறையினரிடம், ‘இது என்ன சரக்கு பார்சல்னு எங்களுக்குத் தெரியாது. இந்த பார்சல கவனமா கொண்டு போயி கொழும்பு பக்கமுள்ள ஒரு ஏரியாவுக்கு வர்ற ஒருத்தரிடம் ஒப்படைக்கனும்னு சொல்லி அவரோட விபரம் குடுத்தாங்க. நாங்க கடத்துறதுக்கு கூலிய மட்டும் வாங்கிட்டுப் போற ஆளுக. கடத்துறது என்னதுன்னு கேள்விலாம் கேட்க மாட்டோம். இது பத்துன விஷயத்த இருதயவாஸிடம் தான் கேக்கனும் அவர்ட்ட நாங்க வேல செய்றோம். அவர்தான் இதக்குடுத்தார்’ என்று முழு தகவலையும் விடாமல் சொல்ல, அடுத்த கணம் கடத்தலின் தலைவன் இருதயவாஸையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘இந்தப் பார்சல் சரக்கு கோவாவிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, சென்னைப் புள்ளி எங்களுக்கான சேர்ப்புத் தொகையைக் கொடுத்து இலங்கையில் ஒரு பார்ட்டியிடம் ஒப்படைக்கச் சொல்லியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர், ‘கிறிஸ்டல்மெத்தாம் பெட்டமைன்’ இனிப்பு ருசி கொண்ட போதைச் சரக்கு என்று மட்டுமே தன்னிடம் சொல்லப்பட்டது. என்று தெரிவித்திருக்கிறார்.

க்யூ பிரிவின் விசாரணை அதிகாரியிடம் நாம் பேசியபோது, “போதை உலகில் இது வினோதமான புதுச் சரக்காகத் தெரிகிறது. நாங்களும் போதைத் தடுப்பான நார்க்கோட்டிவ் யூனிட்டிடம் விசாரித்த போது. கூடுதல் இனிப்புத் தன்மை, போதையுள்ள கிறிஸ்டல்மெத்தாம் பெட்டமைனின் இந்திய மதிப்பு 10 கோடி. சர்வதேசச் சந்தையில் அது மூன்று மடங்கான 30 கோடி மதிப்பு கொண்டது. அந்தப் பார்சலை இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள தாஸ் என்பவரிடம் கொண்டு சென்று ஒப்படைக்க இவர்களின் கூலி மட்டும் 55 லட்சம். கொழும்பு நகரின் தாஸ் இலங்கையின் ஆளுங்கட்சிப் புள்ளியின் மகனுக்கு நெருக்கமான அரசியல் பவர் உள்ளவராம்.

பிடிபட்டவர்கள் கடத்தல் கூலியாட்கள். இலங்கைக்குக் கடத்தவிருக்கும் சரக்கின் மதிப்பிற்கேற்ப இருதயவாஸ் கடத்தல் ரேட்டைப் பெறுவதுண்டு. விரளி மஞ்சள், கடல் அட்டை, சிகரெட் போன்றவைகள் இலங்கையில் பத்து மடங்கு விலைகியதால், கடத்தலையே இவர்கள் தொழிலாக்கிவிட்டனர். இதே வழியில்தான் கடத்தப்படும் போதைச்சரக்குகளும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு, பின் அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுவிடும்.

தூத்துக்குடியின் தருவைக்குளம், திரேஸ்புரம் கடற்பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்டாலும் அந்தக் கடல் பகுதி விரைவான போட்டிங்கிற்கு சற்று வித்தியாசமாகக் காணப்படுவதால் கீழ் பக்கம் உள்ள சமதள விரைவுக்கடல் பகுதியான வேம்பார் கடல் பகுதியை கடத்தல் தளமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். விரைவான போட்டிங் என்பதால்தான் அவர்களை நாங்கள் சேஸ் செய்வதற்குள் எங்களுக்கு மூச்சு வாங்கிவிட்டது. பல்வேறு நெட் ஒர்க்குகளைக் கொண்டிருக்கும் இருதயவாசுக்கு தான் கடத்தல் தொழிலை சிரமமின்றிச் செய்வதற்காக மரைன், கோஸ்ட்டல் கார்டு, நேவி போன்ற கடல் பாதுகாப்பு படையிலும் ஸோர்சுகளை வைத்திருப்பவன். அவர்கள் மூலம் கடல் பாதுகாப்பு படையின் போக்கைத தெரிந்து கொண்டு சிக்காமலிருக்க, சிரமமின்றி கடத்தல் தொழிலை நடத்தி வந்திருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் தனது ஊர் முழுக்க உளவாளிகளை வைத்திருப்பவன். போலீஸ், அல்லது வேறு உளவு யூனிட்களோ இவனைப் பின்தொடர ஊருக்குள் சென்ற மறுநொடி, தகவல் போய் தப்பித்துவிடுவான் இருதயவாஸ். எத்தனையோ முறை நாங்கள் இவனுக்குக் குறிவைத்தும் சிக்காமல் போனவன் இம்முறை எங்களின் கச்சிதமான குறிவைப்பில் சிக்கிவிட்டான்.

தவிர இன்னுமொரு விஷயமுமிருக்கிறது. மற்ற போதைப் பொருட்களைவிட கிறிஸ்டல்மெத்தாம் பெட்டமைனை கொண்டு செல்லும் போதும், அதனைப் பயன்படுத்துவதற்கு முன்னர் வரை நுணுக்கமாகக் கையாள வேண்டும். ஊசிமுனை அளவு கூடக் காற்றுப்புகாமல் ஜாக்கிரதையாகப் பேக்கிங் செய்ய வேண்டும். காற்று புகுந்துவிட்டால், அது உருகித் தண்ணீராகிவிடும். மொத்தச் சரக்கும் வீணாகி நஷ்டமாகிவிடும் என்பதால் பேக்கிங்கிலும், கொண்டு செல்வதிலும் கவனமாகச் செயல்படுகிறார்கள். இதன் தயாரிப்பு மத்திய அரசின் என்.பி.சி.டி. எனப்படும் நார்க்கோட்டிவ் பீரோ ஆஃப் சென்ட்ரல் டிபார்ட்மெண்டிடம் கேட்டால் தெரியவரும் என்றார் விசாரணை அதிகாரி.

க்யூ பிரிவின் இன்ஸ்பெக்டரான விஜய அனிதாவிடம் பேசியபோது, “ஒரு வருடமாக நாங்கள் இவர்களுக்குக் குறிவைத்துக் கொண்டிருந்தோம் தப்பி வந்தனர். ஆன்லைனிலும், வாட்ஸ்அப் கால்களிலும் இவர்கள் பேசிக்கொள்வதால் எங்களால் ட்ரேஸ் பண்ண முடியல. ஆனா இந்த முறை எங்க டீம் முழுவதும் கவனமாகச் செயல்பட்டதால வளைக்க முடிஞ்சிது. கல் உப்பு, கற்கண்டு போல இருக்கு அந்தப் போதைக் சரக்கு. வேம்பார் பகுதி வழியா, சரியான உட்கையாட்களைக் கொண்டு கடத்தலில் ஈடுபட்டிருக்காங்க சரக்குடன் பிடிபட்டவர்களை என்.ஐ.பி.யிடம் ஒப்படைத்து விட்டோம்” என்கிறார்.

தீவிர முயற்சிக்குப் பின்னர் என்.பி.சி.டி. யூனிட்டினரிடம் கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் பற்றிப் பேசியபோது. அவர்களோ, “இந்தவகையான பெட்டமைன், லீவோ டெக்ஸ்ட்ரோ, மற்றும் டெக்ஸ்ட்ரோ மெத்தாம் பெட்டமைன் எனப்படுகிற ரசாயன கெமிக்கல் மூலம் தயார் செய்யப்படுகிறது. இது மருத்துவப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப் படுகிறது. மன அழுத்தம், மன உளைச்சல், போன்ற மன வியாதி சம்பந்தமான வகையில் பாதிக்கப்பட்டு உறக்கமின்றித் தவிப்பவர்களுக்கு மருத்துவர்கள் இதன் மூலம் முறையான அளவினைக் கொண்டு சிகிச்சை செய்வதால், அவர்களின் மனம் ஒரு நிலைப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அமைதியான உறக்கத்தையும் ஊக்கத்தையும் ஓய்வினையும் கொடுக்கும். அடுத்து கடின வேலைகளைச் செய்ய உத்வேகம் ஊக்கமளிக்கும். இந்தக் குறைபாடுகளுக்காக மருத்துவர்களின் பரிந்துரையின் படி தான் சப்ளை செய்யவேண்டும் என்பது கட்டாயம். 1893ன் போது கண்டுபிடிக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட இந்த பெட்டமைனைக் கவனமாகக் கையாள வேண்டும். சிலர் இதனை உறக்கத்திற்காகவும், போதைக்காவும் அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் மூளையைப் பாதிக்க வைப்பதோடு நரம்பு மண்டலத்தைச் சிதைத்து நரம்புத் தளர்ச்சியை உண்டுபண்ணி கெடுத்துவிடும் தன்மை கொண்டது. அதே சமயம் உட்கொள்ளும்போது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டுவதுடன் கொடூரமான சிந்தனையையும் உருவாக்கிவிடும் ஆபத்திருக்கிறது” என்று சொன்னது வெலவெலக்க வைக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT