ADVERTISEMENT

'மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர்' - சிலம்பரசன் இரங்கல்!

07:24 PM Apr 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16/04/2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் அறிக்கையின் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில், "அன்பு அண்ணன், நம் சின்னக் கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயர் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர், நடிகர் விவேக் சார்.

பண்பாளர். இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளைப் போதித்து வந்தார். மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர். பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார்.

அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கிற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார்.

என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதய அஞ்சலிகள் விவேக் சார்." இவ்வாறு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT