ADVERTISEMENT

ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

07:34 PM Jan 28, 2020 | santhoshb@nakk…

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதன்படி 2002- 2003 ஆம் ஆண்டுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்து 235- ஆம், 2003- 04 ஆம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்து 56 ஆயிரத்து 326- ம், 2004- 05 ஆம் ஆண்டுக்கு ரூ. 54 லட்சத்து 45 ஆயிரத்து 875- ஆம் அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

ADVERTISEMENT


இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் ரஜினிகாந்த். வழக்கை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2013- ஆம் ஆண்டு ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது நிலுவையில் இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (27.01.2020) உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்தாண்டு ஆகஸ்டில் பிறப்பித்த ஒரு சுற்றறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிலும் ரூ.1 கோடி மற்றும் அதற்குக் குறைவாக அபராதத் தொகை விதிக்கப்பட்டு இருந்தால், அதை எதிர்த்துப் புதிதாக வழக்கு தொடர வேண்டியதில்லை என்றும், ஏற்கனவே இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தால் அதை வாபஸ் பெற வேண்டும் எனவும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த வழக்கை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவாமிநாதன் கோரினார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.




Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT