ADVERTISEMENT

மாதவரம் ஆவின் பால் பண்ணையை மற்றொரு கோயம்பேடாக மாற்றி விடாதீர்கள்" -சு.ஆ.பொன்னுசாமி

04:06 PM Jun 02, 2020 | rajavel



தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT


மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கரோனா நோய் தொற்று காரணமாக நேற்று (01.06.2020) மரணமடைந்தார் எனும் அதிர்ச்சி தகவல் வந்த நிலையில், தற்போது அதே பால் பண்ணையில் பணியாற்றிய இணை இயக்குநர் உட்பட ஊழியர்கள் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனும் தகவல் கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கு கரோனா நோய் தொற்று ஏற்படுவது தொடர்கதையாகி வருவது அத்துறை சார்ந்தவர்கள் என்கிற முறையில் எங்களுக்கு மிகுந்த அச்சத்தை தருகிறது.

ஏனெனில் கடந்த மாதம் அங்கே பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கு அந்நோய் தொற்று ஏற்பட்டு பால் உற்பத்தி பாதிக்கப்பட்ட போதே, பால் பண்ணைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கரோனா நோய் தடுப்பு உபகரணங்களை தங்குதடையின்றி வழங்கியிருக்க வேண்டும்.


அத்துடன் பால் பண்ணையின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பால் பண்ணைக்குள் வரும் விநியோக வாகனங்கள், பால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள், அதிகாரிகளின் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கும் முன் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும், பணியாளர்கள், வாகன ஓட்டிகள் அனைவரையும் நன்கு பரிசோதனக்கு உட்படுத்திய பிறகே பால் பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால் ஆவின் நிர்வாகமோ பால் முகவர்கள் சங்கம் எங்களுக்கு ஆலோசனை சொல்வதா..? என எங்களது ஆலோசனையை புறக்கணித்ததோடு, தனியார் பால் விற்பனைக்காக ஆவின் நிர்வாகத்தை குறை சொல்வதாக எங்களது சங்கத்தின் மீது குற்றம் சுமத்தியதே தவிர ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்கள் நலன் மீது அக்கறை கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாக தெரியவில்லை.




ஏற்கனவே கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் அங்குள்ள வணிகர்களும், வணிகர் நல அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காமல் புறக்கணித்ததின் விளைவே கோயம்பேடு கரோனா நோய் தொற்றின் மையமாக மாறியதற்கான காரணமாக அமைந்து விட்டது.

அதுபோல தற்போது ஆவின் நிர்வாகத்தின், தமிழக அரசின் அலட்சியத்தால் மாதவரம் ஆவின் பால் பண்ணையும் கரோனா நோய் தொற்று மையமாக மாறி விடுமோ...? என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே இனியாவது ஆவின் நிர்வாகம் கரோனா நோய் தொற்று விவகாரத்தில் ஈகோ பார்க்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT