ADVERTISEMENT

திருஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்

01:07 PM May 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:’’தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் திருஆரூரான், அம்பிகா ஆகிய பெயர்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து விவசாயிகளின் பெயர்களில் ரூ.450 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறது. உழவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையிலான இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ADVERTISEMENT

திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, கோட்டூர், கடலூர் மாவட்டம் இறையூர், ஏ.சித்தூர் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125 கோடிக்கும் கூடுதலாக நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இரு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலுவைத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகம், நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து சில படிவங்களில் கையெழுத்து வாங்கி, அவற்றை வைத்து விவசாயிகள் பெயரில் வங்கிகளில் இருந்து பல நூறு கோடி கடன் வாங்கியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.90 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.360 கோடியும் கடன் வாங்கப்பட்டு மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எந்தெந்த விவசாயிகளின் பெயர்களில் எல்லாம் கடன் வாங்கப்பட்டதோ, அவர்களுக்கு வங்கிகள் ஜப்தி அறிவிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே இந்த மோசடி வெளிவந்துள்ளது.

ஆலை நிர்வாகத்தின் இந்த செயல் மிகப்பெரிய மோசடிக் குற்றம் என்பது மட்டுமி

ன்றி, மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகமும் ஆகும். உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு உரிய விலையை வழங்காததுடன், அவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதன் மூலம் விவசாயிகளை மீள முடியாத நெருக்கடியில் தள்ளியிருக்கிறது ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம். இதற்காக ஆலை அதிபர் ராம் தியாகராஜனை காவல்துறை கைது செய்திருப்பது பாராட்டத்தக்கது.

பொதுத்துறை வங்கி உயரதிகாரிகளின் துணை இல்லாமல் இத்தகைய மோசடியை திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியிருக்க முடியாது. விவசாயிகள் வேளாண் பயன்பாட்டுக்காக சில ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் கூட, அதற்கு ஏராளமான ஆவணங்களைக் கேட்கும் பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள், எந்த ஆவணமுமே இல்லாமல் வெற்றுப் படிவத்தில் போடப்பட்டிருந்த விவசாயிகளின் கையெழுத்துகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ரூ.450 கோடி கடனை வாரி வழங்கின? என்பது தெரியவில்லை. விவசாயிகளுக்குத் தான் கடன் வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் கடன் தொகையை, விவசாயிகளிடம் வழங்காமல் சர்க்கரை ஆலைகளிடம் வழங்கியது ஏன்? என்ற வினாவும் எழுகிறது. இந்த வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்ற வேண்டும்.

ஒரு காலத்தில் நேர்மையான நிறுவனமாக செயல்பட்டு வந்த திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் இப்போது மோசடிகளின் மொத்த உருவமாக மாறியிருக்கிறது. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு உரிய தொகையை வழங்காமல் பாக்கி வைப்பது மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய வெட்டுக் கூலியை முடக்கி வைப்பது, ஆலை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்க மறுப்பது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் செய்துள்ளது.

இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆலை நிர்வாகம் மீது பல நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காததற்காக இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை, திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகியவற்றின் சர்க்கரைக் கிடங்குகளை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ரசு மூடி முத்திரையிட்டது. ஆனால், அதன் பிறகும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திருந்தவில்லை என்பதையே ரூ.450 கோடி மோசடி காட்டுகிறது.

உழவர்களுக்கு துரோகம் இழைத்து அவர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் இனியும் பழைய நிர்வாகத்தில் இயங்குவது சரியல்ல. அது மேலும் மேலும் ஊழல்களும், மோசடிகளும் நடப்பதற்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே, திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் ஆலை உரிமையாளரின் பெயருக்கு மாற்றி, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் உழவர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இந்த மோசடியில் பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT