மறைந்த திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் இரங்கற்பா வாசித்ததால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, விஆர்எஸ் கொடுத்த நுண்ணறிவு பிரிவு பெண் காவலர் செல்வராணி குறித்து நாம் ஏற்கனவே நக்கீரன் இணைதளத்தில் எழுதியிருந்தோம். இந்த நிலையில் திருச்சிக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலின் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து நான் அண்ணாக இருப்பேன் என்று உருகியது உணர்ச்சிமிகுந்த இடமாக மாறியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/x.jpg)
திருச்சி மாநகர போலீசில் நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் செல்வராணி இவர் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் இறந்தபோது, இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் இரங்கற்பா வாசித்தார். இது வைரலாக பரவியது. இதேபோல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இரங்கற்பா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கலைஞருக்கு இரங்கற்பா வாசித்ததற்கு விளக்கம் கேட்டு உயரதிகாரிகள் மெமோ அளித்தனர். செல்வராணி விளக்கம் அளிப்பதற்குள் அவர் மாநகர போலீசிலிருந்து மத்திய மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து பழிவாங்கும் நடவடிக்கையால் வெறுப்படைந்த அவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கிடையே மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் மாலை திருச்சி திரும்பிய ஸ்டாலின் செல்வராணி விஆர்எஸ் கொடுத்த தகவல் அறிந்து இரவு 10.30 மணிக்கு கே.கே.நகர், ரெங்கநகர் 3வது மெயின்ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/x1.jpg)
அப்போது செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், ‘இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளனாரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? இனி என்ன செய்யப்போகிறீர்கள்’ எனக்கேட்க, ‘இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைபணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன்’ என செல்வராணி என்றார்.
‘நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கலைஞரை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம்’ என உருக்கமாக தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை இரங்கல் கவிதை வாசித்து காண்பிக்க அதை கேட்டவுடன் மு.க.ஸ்டாலினும் மனம் கலங்கினார்.
அப்போது திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, செல்வராணியின் கணவர் ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)