ADVERTISEMENT

“சாவு கிராக்கி.. 9 ரூபாய்க்கெல்லாம் கணக்கு பார்க்குது..” -தியேட்டர் தில்லுமுல்லு!

04:05 PM Jul 03, 2019 | kalaimohan

சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் “டிக்கெட்ல போட்டிருக்கிற ரேட்டைவிட ஏன் கூடுதலா வாங்குறீங்க?” என்று பார்வையாளர்கள் வாக்குவாதம் செய்வதெல்லாம் தமிழகத்தில் வாடிக்கையாக நடப்பதுதான். இதற்குக் காரணம், திரையரங்குகளின் விதிமீறலான செயல்களை முறைப்படுத்த வேண்டிய அரசுத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

மதுரையில் ஒலி, ஒளி அமைப்பில் நவீன தொழில்நுட்பங்களுடன் பார்வையாளர்களுக்கு மேம்பட்ட சினிமா அனுபவத்தைத்தரும் திரையரங்குகளாக ஐநாக்ஸ், வெற்றி போன்ற தியேட்டர்கள் உள்ளன. ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் சினிமா திரையரங்குகள் உள்ளன. அதனால், மதுரை உட்பட, ஐநாக்ஸ் டிக்கெட் கவுன்டர்களில் பிரச்சனை எதுவும் எழுவதில்லை. தரத்தில் ஐநாக்ஸுக்கு இணையாக மதுரையில் வெற்றி தியேட்டர் இருந்தாலும், கட்டணம் வசூலிக்கும் விஷயத்தில் ‘தில்லுமுல்லு’ செய்வதுபோன்ற சந்தேகத்தைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவருகிறது.


மதுரை ஐநாக்ஸில் டூ வீலர் பார்க்கிங் ஏரியாவானது விஷால்டி மால் அன்டர்கிரவுன்ட் கட்டிடத்தில் பாதுகாப்பானதாக இருக்கிறது. வெற்றியில் அப்படி கிடையாது. டூ வீலர்களை வெட்ட வெளியில் வெயிலில்தான் நிறுத்த வேண்டும். பார்க்கிங் கட்டணமாக ஐநாக்ஸ் தியேட்டருக்குச் செல்பவர்கள் தருவது ரூ.20 மட்டுமே. வெற்றி தியேட்டரிலோ பார்க்கிங் கட்டணமாக ரூ.30 வாங்குகிறார்கள். வெயிலில் டூ வீலர்களை நிறுத்துவதற்கு ஏன் ஐநாக்ஸை விட 10 ரூபாய் அதிகமாக 30 ரூபாய் பார்க்கிங் கட்டணம் தரவேண்டும்? பார்வையாளர்கள் பலரும் வெற்றி தியேட்டர் பார்க்கிங் ஏரியாவில் புலம்பாத நாளில்லை.


சரி, டிக்கெட் கட்டண விஷயத்துக்கு வருவோம். வெற்றி தியேட்டருக்கு நண்பர்கள் இருவர், ‘அன்னபெல்’ சினிமா பார்ப்பதற்கு நேற்று இரவுக்காட்சிக்குச் சென்றிருக்கின்றனர். முதல் வகுப்பு கட்டணம் என ரூ.190-78 என்று போட்டிருந்த டிக்கெட்டுக்கு ரூ.200 வசூலித்திருக்கின்றனர். இரண்டு டிக்கெட்டிற்கு ரூ.400 வசூலித்ததால், காரணம் கேட்டிருக்கிறார்கள் நண்பர்கள். உடனே, ரூ.5 பெறுமான மஞ்ச் சாக்லேட் இரண்டினைக் கொடுத்திருக்கிறார் டிக்கெட் கவுன்டரில் இருந்தவர். அப்படி பார்த்தாலும், டிக்கெட் ஒன்றுக்கு ரூ.9 அதிகமாக அல்லவா வாங்குகின்றீர்கள்? இது பகல் கொள்ளை.. இல்லை.. இல்லை.. ராத்திரி கொள்ளை என்று குரலை உயர்த்தியிருக்கிறார்கள் நண்பர்கள். “சாவு கிராக்கிக.. 9 ரூபாய்க்கெல்லாம் கணக்கு பார்க்குது..” என்று அவமரியாதையாகப் பேசியிருக்கிறார் கவுன்டரில் இருந்தவர். கேளிக்கை மனநிலையோடு சினிமா பார்க்கச் சென்ற நண்பர்களுக்கு, அந்தத் தியேட்டர் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.


நண்பர்கள் நம்மிடம் குமுறலாகக் கூறியதை, மதுரை – வெற்றி தியேட்டர் மேலாளரைத் தொடர்புகொண்டு எடுத்துச்சொன்னோம். “அதுவாங்க.. டிக்கெட் ரேட்டே ரூ.200 தான். அப்டேட் செய்யாமல், பழைய ரேட்டிலேயே இருக்கு. மற்றபடி, அந்த சாக்லேட்டெல்லாம் 200 ரூபாய் டிக்கெட் வாங்குறவங்களுக்கு காம்ளிமென்ட்ரியா தர்றதுதான். இனிமேல் பிரச்சனை வராமல் பார்த்துக்கிறோம்.” என்று சமாளித்தார்.


அதிக கட்டணம் வசூலிக்கும் சினிமா தியேட்டர்கள், அன்னியன் திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். தரமற்ற உணவு தயாரித்த கான்ட்ராக்டருக்கு தண்டனை அளிப்பதற்கு முன்பாக அன்னியன் எழுப்பும் கேள்வியும், அதற்கு கான்ட்ராக்டர் தரும் பதிலுமாக வரும் அந்தக் காட்சி இதோ -



“அஞ்சு பைசா திருடினா தப்பா”
“பெரிய தப்பு இல்லீங்க”
“அஞ்சு கோடி பேரு அஞ்சு பைசா திருடினா தப்பா?”
“தப்பு மாதிரிதாங்க தெரியுது”
“அஞ்சு கோடி பேரு அஞ்சுகோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா..?”
“பெரிய தப்புங்க..”
“அதுதான் இங்கே நடக்குது..”

சிறு அளவிலான தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான், பெரிய அளவிலான குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு ஊக்கமளிப்பதுபோல் ஆகிவிடுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT