Skip to main content

"நானும் மதுரைக்காரன்தான்டா" என்று பெருமையாக சொல்பவரா? - உங்களுக்கு இன்று முக்கியமான நாள்!

Published on 06/03/2018 | Edited on 08/03/2018

1790ஆம் ஆண்டு இதே நாளில்தான் (மார்ச்6) பிரிட்டிஷார் நிர்வாக வசதிக்காக மதுரையை மாவட்டமாக அறிவித்தனர். அப்போது இருந்த மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இன்றைய  மாவட்டங்கள் அடங்கி இருந்தன. பழமையை விட்டுக்கொடுக்காமல், பழையதை மட்டும் விட்டொழித்துக்கொண்டிருக்கும் தூங்காநகரம்தான் மதுரை. அதன் சிறப்புகளை காண்போம். 
 

madurai


ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும், வெளியூருக்கு வந்துவிட்டால் "நானும் மதுரக்காரன்தான்டா" என்று மதுரைக்காரர்கள் துள்ளலோடு ஒன்று கூடிவிடுவர். அந்தளவிற்கு மதுரைக்காரனும் சரி, மதுரைத் தமிழும் சரி மற்றவர்களையும் கூட இழுக்கும் கவர்ச்சி மிக்கது. உலகின் பழமையான நகரமான மதுரைக்கு இலக்கிய காலம் முதல் இந்தக் காலம்வரை (தூங்காநகரம், மல்லிகை மாநகர், கூடல்மாநகர், நான்மாடக்கூடல், ஆளவாய், மருதை, மதிரை, மத்திரை, ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர், மாடமதுரை, உரைசால் மதுரை, தென்தமிழ்நாட்டு தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை) பல பெயர்கள் உண்டு. மதுரைக்கு மட்டும் இங்கு வரலாறு இல்லை, மதுரையில் இருக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இலக்கியம், ஆன்மிகம், புராணம், வரலாறு, புனைவு, வாழ்வியல், பாரம்பரியம் என அனைத்திற்கும் ஏதாவது ஒரு நினைவுச்சின்னம் மதுரையில் நிச்சயம் காணலாம்.
 

madurai


சிலப்பதிகாரம், நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, கி.மு. 300ல் மெகஸ்தனிஸ், கி.மு. 60ல் நிகோலஸ் தமாஸ்கஸ், கி.பி. 77ல் பிளினி,  கி.பி. 140ல் தாலமி,  கி.பி.1270ல் மார்க்கோபோலோ ஆகியோர் தங்கள் குறிப்புகளில் மதுரையை குறிப்பிட்டுள்ளனர். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கம் (கடைச்சங்கம்) வைத்து தமிழ்வளர்த்ததும் மதுரையில்தான், ஒரு மொழியை தாயாக எண்ணி சிலை திறக்கப்பட்ட இடமும் மதுரைதான். இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் நடந்த மாபெரும் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் என நாம் பெருமையாக கூறுகிறோம். அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டிற்கு உலக பிரசித்தி பெற்றது மதுரை. மதுரையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, பேரையூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதை காண வெளிநாட்டுப் பயணிகளும் வருவர்.
 

madurai


மதுரை ஒவ்வொரு முறை விரிவு படுத்தப்பட்ட போதும் அதன் கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்படி கடைசியாக எஞ்சி இருப்பது மேலவாசல் கோட்டை கொத்தளம் மட்டும்தான். இங்கிருக்கும் திருமலை நாயக்கர் மஹால் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்று. 52 அடியில் 248 தூண்களைக் கொண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய அரண்மனையாகும். ஆங்கிலேயர்களை எதிர்த்துப்  போராடிய மன்னனான மருதநாயகம் என்ற யூசுப்கான்  1764ம் ஆண்டு மதுரை சம்மட்டிபுரத்தில்தான் ஆங்கிலேயர்களால்  தூக்கிலடப்பட்டார். அவரது உடல் மட்டும் அங்கு புதைக்கப்பட்டது. காந்தியை கோட்ஸே சுட்டுக்கொன்றபோது, காந்தி அணிந்திருந்த மேலாடை இரத்த கரையுடன்  தமுக்கம் மைதானத்தில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ளது. இது தவிர காந்தி பயன்படுத்திய 14 பொருட்கள் அங்கு உள்ளன. காந்தி ஏழை மக்களைப் பார்த்து அரைநிர்வாணமாக மாறிய இடமும் மதுரைதான். 
 

madurai


மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று, உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்க ஒரு வலைத்தளத்தால் பரிந்துரைக்கப்பட்ட இடம், மதுரையின் மையம். இக்கோவிலில் இருக்கும் பொற்தாமரைக்குளம் சிறப்பு வாய்ந்ததாகும். மதுரையின் அமைப்பும் தாமரை மொட்டைப்போன்றுதான் இருக்கும். கோவிலைச்சுற்றியுள்ள வீதிகளும் மொட்டில் இருந்து பிரியும் இதழ்கள் போன்றுதான் இருக்கும். அழகர் கோவில் 108 வைணவ தளங்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும்போது வைகை ஆறே மக்கள் கடலில் மூழ்கும். முருகனின் அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய இரு வீடுகள் மதுரையில்தான் உள்ளன. கீழக்குயில்குடி என்னும் இடத்தில் சமணப்படுகைகள், சிற்பங்கள் ஆகியனவும் உள்ளன. கோரிப்பாளையம்  காஜிமார் பெரிய மசூதி ஒரே நேரத்தில் 2500 நபர்கள் தொழும் அளவிற்கு பெரிய மசூதி ஆகும். ரோமன் கத்தோலிக்க ஆலயமும் இங்கு புகழ்பெற்றதாகும்.
 

madurai


ஆயிரம் குளிர்பானங்கள் வந்தபோதும் பழமைமாறாத ஜிகர்தண்டா புகழ்பெற்று இருப்பதும் மதுரையில்தான். மாடுகட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்தவன் அந்தக்கால மதுரைக்காரன். ஆனால் இன்று, வைகை வற்றிய கிரிக்கெட் மைதானமாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் சாக்கடையாகப் பாய்கிறது. இவற்றைத் தாண்டி நல்ல தண்ணீர் பாய்ந்தாலும் அது குழந்தை தாண்டும் அளவிலேயே இருக்கிறது. நாம் இன்று "proud to be a maduraikaran" என்று வெளியே சொன்னாலும், மதுரை கொஞ்சம் கொஞ்சமாக தன்னியல்பை இழந்து வருகிறது. மதுரையை மீட்டெடுக்க மதுரைக்காரர்கள்தான் முயற்சி செய்யவேண்டும். நானும் மதுரைக்காரன்தான்டா...

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.