ADVERTISEMENT

சோதனைச்சாவடியில் வைத்தே 85 தமிழர்களைக் கைது செய்து ஆந்திரக் காவல்துறை அட்டூழியம் - வேல்முருகன்

11:34 AM Mar 02, 2018 | Anonymous (not verified)



செம்மரம் வெட்ட வந்தார்கள் என சோதனைச்சாவடியில் வைத்தே 85 தமிழர்களைக் கைது செய்து அட்டூழியம். சட்டவிரோதம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மையில்தான் 5 தமிழர்களை செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி அடித்தே கொன்று முட்டளவு தண்ணீரும் இல்லாத குட்டையில் தூக்கி வீசியிருந்தது ஆந்திர காவல்துறை. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இப்போது 85 தமிழர்களைக் கைது செய்திருக்கிறது ஆந்திரக் காவல்துறை.

திருப்பதி – கடப்பா சாலையில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் வைத்தே 85 தமிழர்களையும் கைது செய்திருக்கிறது ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புக் காவல்துறை. சந்தேகத்துக்குரிய வகையில் வந்த லாரியை சோதனை செய்ததில், 85 பேர் இருந்ததாகவும், கூடவே சமையலுக்குத் தேவையான பொருட்களும் இருந்ததாகவும், அதனால் அவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களே என்றும் சொல்லி கைது செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட அவர்கள் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பல பேர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். இவர்கள், தாங்கள் சமையல் வேலை மற்றும் கட்டட வேலைக்கு என்று சொல்லியே அழைத்துவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களைக் கேட்டபோது, செம்மரம் வெட்டுதல் தொடர்பான பிரச்சனைகளைத் தாங்கள் நன்கு அறிவோம் என்பதால், அதற்காக இல்லாமல் வேறு வேலை என்பதாலேயே வந்தோம் என்றனர். ஆனால் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நாளிலிருந்தே அது தனது இருப்பைக் காண்பிக்க இத்தகைய சட்டவிரோத மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

அன்று 20 தமிழர்கள் சுட்டுக்கொலை, அதன் பின் பல முறை நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கைது, அண்மையில் 5 தமிழர்கள் அடித்தே கொலை, இன்றோ 85 தமிழர்கள் கைது. அதோடு ஆந்திரச் சிறைகளிலும் 3,500க்கும் மேற்பட்ட தமிழர்கள். இவை எல்லாமே ஆந்திரக் காவல்துறையின் அடாவடித்தனம் மிதமிஞ்சிப் போய்விட்டதைத்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்சனையை தமிழக அரசு முறையாக, சரியாக, சட்டப்படியாக அணுக வேண்டும். சட்டவிரோதம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT