ADVERTISEMENT

தந்தையின் மூட நம்பிக்கை; 80 வயது முதியவரை குத்திக் கொலை செய்த 70 வயது முதியவர்!     

03:35 PM Jun 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உசிலம்பட்டி அருகே மகன்கள் இருவரும் இறந்ததற்கு முதியவர் விட்ட சாபம் காரணமாக இருக்குமோ என்ற மூட நம்பிக்கையில், மது பாட்டிலால் முதியவரைக் குத்திக் கொலை செய்த முதியவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள சேடபட்டி - ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஆழி (வயது 80) சலவைத் தொழிலாளி ஆவார். முதியவரான இவருக்கும் சின்னக்கட்டளையைச் சேர்ந்த முத்தையா (70) என்ற முதியவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முதியவர் ஆழி முத்தையாவைப் பார்த்து ‘உன் குடும்பமே அழிந்து போகும்’ என சாபம் விட்டுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் முதியவர் முத்தையாவின் இளையமகன் முத்துராஜா இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மூத்த மகன் மூர்த்தியும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

அதனால், நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டார் முத்தையா. தனது மகன்கள் இருவரும் இறந்ததற்கு, தன்னுடன் தகராறில் ஈடுபட்ட ஆழி விடுத்த சாபம் காரணமாக இருக்குமே என்ற மூட நம்பிக்கையில் இருந்து வந்த முத்தையா, சின்னக்கட்டளை முனியாண்டி கோவில் பின்புறம் மது அருந்தியபோது, அங்கு வந்த ஆழிக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது, தனது மகன்கள் இறப்புக்கு நீ விடுத்த சாபம்தான் காரணம் என, ஆழியுடன் தகராறில் ஈடுபட்ட முத்தையா, மது பாட்டிலால் ஆழியின் கழுத்தில் குத்தினார். பலத்த காயமடைந்த ஆழி அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆழி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல்நிலைய போலீசார், ஆழியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் முத்தையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மூட நம்பிக்கையால் முதியவர் ஒருவரது உயிர் பறிபோக நேரிட்டதோடு, இன்னொரு முதியவர் கொலைக் குற்றச்சாட்டில் கைதாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT