ADVERTISEMENT

“தமிழகம் முழுவதும்  500 கலைஞர் உணவகம் திறக்கப்படும்” - டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி  

10:18 AM Nov 26, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் விரைவில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையலறை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (25.11.2021) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குடிமக்கள் பாதிக்கப்படும் நிலையைப் போக்கும்விதமாக இத்திட்டம் அமைந்தது. தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் இருந்துவருகிறது. இதில் மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக கடந்த 2007ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு சிறப்பு வினியோகத் திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், 2 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூபாய் 978 கோடி செலவிலும், அதேபோன்று தலா 4,000 ரொக்கத் தொகையும் கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி மாதம் 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திவருகின்றன. இதில் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த உணவகத்தில் பயனடைகின்றனர் மற்றும் இதர பேரிடர் காலத்தில் இந்த உணவகங்களில் கட்டணங்கள் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது.

இது போல், வருங்காலங்களில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உணவகத்தை நடத்த சராசரியாக மாதம் 3.5 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும் விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013இல் 100 விழுக்காடு நிதியுதவி வழங்கப்பட வேண்டும். புதிய உணவகங்கள் திறக்கப்பட்டாலும் தற்போது உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

நெல் கொள்முதல் தீர்ப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சர், 19% ஈர்ப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். அதேபோல் மற்றொரு கோரிக்கையாக, தமிழகத்தில் அரைக்கப்படும் பச்சரிசியில் ஒரு லட்சம் டன்னை அருகில் உள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஒரு லட்சம் டன் புழுங்கலரிசியை வழங்கிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவைப் பட்டினி மற்றும் சத்துக்குறைவு இல்லாத நாடாக மாற்றுவதில் தமிழகமும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் என்றென்றும் துணை நிற்பார்கள். இந்த ஒன்றிய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் இவை அனைத்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT