ADVERTISEMENT

சென்னையில் கடும் புகைமூட்டம்; 50 விமான சேவை பாதிப்பு

07:35 AM Jan 14, 2024 | ArunPrakash

கோப்புப்படம்
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

ADVERTISEMENT

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும். அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடும் புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் 50 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21 விமானங்கள் புறப்படுவதிலும், 21 விமானங்கள் சென்னைக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT