ADVERTISEMENT

304 நாட்களைக் கடந்த வேங்கைவயல் விவகாரம்; 7வது முறையாக அவகாசம் கேட்கும் சிபிசிஐடி

05:56 PM Oct 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இதுவரை 4 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 12.10.2023 அன்று ஒரு சிறுவன் உட்பட 4 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் வேங்கை வயல் விவகாரத்தில் இதுவரை 5 சிறுவர்கள் உட்பட 30 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 221 பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் நடந்து 304 நாட்கள் கடந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை 284 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம், கால அவகாசம் கொடுத்து அனுமதி அளித்தது.

ஏற்கனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 6 முறை அவகாசம் கேட்டு அனுமதி பெற்ற நிலையில், தற்பொழுது ஏழாவது முறையாக அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT