ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

07:22 AM Apr 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண 4 இடங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராமன் கூறியதாவது:

“தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 6ஆம் தேதி நடந்தது. மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு நான்கு அமைவிடங்களில் 11 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் ஆகியோர் ஆய்வு செய்வதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் தனியாக கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிக்க வசதியாக எல்இடி டி.வி.க்களும் பொருத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கே ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சேலம் அம்மாபேட்டை கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஸ்ரீ மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சுவாமி விவேகானந்தா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ளூர் காவல்துறையினர், சிறப்பு காவல் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாநகர காவல்துறை ஆணையர், எஸ்பி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். ஆய்வு செய்வோர், தங்கள் வருகையை உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் அளவிலான நிர்வாக நடுவர்கள் அமர்த்தப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்புப் பணியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தீத்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.” இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.

முன்னதாக அவர் சங்ககிரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சங்ககிரி சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பன், எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT