ADVERTISEMENT

கடைமுன்பு குப்பைத்தொட்டி வைத்த சம்பவத்தை கண்டித்து 24 மணி நேர கடையடைப்பு போராட்டம்... பொதுமக்கள் பாதிப்பு ஏற்படும்!!

07:16 PM Feb 02, 2020 | kalaimohan

சிதம்பரம் நகராட்சியில் தொழில் வரி கட்டாததால் குப்பை தொட்டியை கடை வாயிலில் வைத்த நகராட்சி நிர்வாகம். கொதிப்படைந்த வணிகர்கள் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பிப்ரவரி 3 அன்று 24 மணிநேர கடையடைப்பு போராட்டத்திற்கு சிதம்பரம் வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் தொடர்ந்து தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை கட்டாமல் இருந்ததால் ரூ13 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகத்தை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிதம்பரம் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் மின்கட்டணம் செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு கோடிக்கணக்கான தொகை நிலுவையில் உள்ளது. இதனை கட்டக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரபடுகிறது.

இந்த நிலையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு வாங்கப்பட்ட கடனும் நகராட்சி நிர்வாகத்தால் கட்ட முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூலிக்க பல்வேறு குழுக்களை நியமித்துள்ளார். அதனடிப்படையில் வரி வசூலிப்பு குழுவினர் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் வீடுகளில் வரி பாக்கி உள்ள இடங்களில் நோட்டிஸ் கொடுத்து வருகிறார்கள்.

ADVERTISEMENT


இந்தநிலையில் நோட்டீஸ் கொடுத்தும் வரிபாக்கி செலுத்தாத 8 கடைகளின் வாயில் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. இதற்கு சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து வணிகர்களையும் அழைத்துள்ளனர். இதனை அறிந்து சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமையில் அவரது அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் சிதம்பரம் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, வர்த்தக சங்க தலைவர் சதீஷ், பொருளாளர் முரளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். வணிகர்களிடம் இவ்வளவு வரி பார்க்கிற்கு நகராட்சி நிர்வாகம் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில் பிப்3- ந்தேதி தேதி 24 மணிநேர கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்து சிதம்பரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நகரில் உணவு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் மூடப்பட்டால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து வந்து சிதம்பரத்தில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைவார்கள் இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு இரு தரப்பையும் அழைத்து பேசி கடையடைப்பு போராட்டத்தை திரும்பபெற வலியுறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT