ADVERTISEMENT

144 தடையை மீறி தீட்சதர் திருமணம்... மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

06:52 PM Apr 07, 2020 | kalaimohan

உலக நாடுகளை கரோனா என்ற தொற்றுநோய் அச்சுறுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் இதனால் தினம், தினம் செத்து பிழைத்து வருகிறார்கள். நோயிலிருந்து தப்பிக்க இந்திய அரசு சமூக பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை வரும் 14ம் தேதி வரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் 144 தடை உத்தரவு அறிவித்து, கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் திருமணம் மற்றும் எந்த விசேஷங்களும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் திருமண மண்டபங்கள் சீல் வைக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனால் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் ஆங்காங்கே மணமகள், மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மட்டும் கலந்துகொண்டு மிகவும் எளிமையாக கோயில்களின் வெளிப்புற தெருக்களில் நடைபெற்றது.

ADVERTISEMENT



இந்நிலையில் திங்களன்று சிதம்பரம் கீழ வீதியிலுள்ள மெ.செ. மஹால் திருமண மண்டபத்தில் சிதம்பரம் கோயில் திட்சிதர்களின் மகன், மகளின் திருமணவிழா மண்டபத்தின் கதவுகளை அடைத்துக்கொண்டு வெளியே தெரியாததுபோல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டபத்தின் உள்ளே 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் முக கவசம் அணியாமல் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒலிபெருக்கி மூலம் மண்டபத்தில் உள்ளவர்களை வெளியே வரச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் கதவை பூட்டிக்கொண்டு திறக்காமல் இருந்தனர்.


பின்னர் காவல்துறையினர் கதவை திறக்கவில்லை என்றால் உடைத்துக்கொண்டு உள்ளே வருவோம் என எச்சரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து உள்ளே இருந்தவர்கள் சிலர் மட்டும் வெளியே வந்தனர். மீதியுள்ளவர்களை காவல்துறையினர், வெளியே அனுப்ப எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. 144 தடையை மீறி ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களை கூட்டமாக கூட்டியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு காவல்துறையினர் நகர்ந்தனர்.

அதனைதொடர்ந்து தீட்சிதர்கள் மண்டபத்தின் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களை வைத்து திருமணத்தை சிறப்பாக நடத்தினர். பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், கரோனா தடை உத்தரவு போட்டதிலிருந்து முக்கிய வீதியான கீழவீதியை காவல்துறை தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். திருமணம் நடக்கும் மண்டபத்திற்கும், போலீஸார் காவல் பணியில் இருப்பதற்கும் 100 அடி தூரம்தான் இருக்கும். தீட்சிதர்கள் திருமண நிகழ்ச்சிகளை 4 நாட்கள் நடத்துவது வழக்கம். இது ஞாயிற்று கிழமையிலிருந்து நடக்குது. இந்த வழியாகதான் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் செல்லவேண்டும்.

மண்டபத்திற்கு வெளியே வாழைமரம், தோரணம், லைட் என எல்லாம் கட்டி திருமணத்தை நடத்துகிறார்கள். உள்ளே மேளசத்தம் தெருவில் செல்பவர்களுக்கு நன்கு கேட்கிறது. இதுபோன்ற நேரத்தில் தீட்சிதர் அல்லாமல் வேறு யாரவது இப்படி கல்யாணம் செய்தால், வாழைமரம் கட்டும்போதே அவர்கள் மீது வழக்கு போட்டு இருப்பார்கள்.

இது ஏற்கனவே பால்ய விவாஹம் (குழந்தை திருமணம்) நடந்ததை, தற்போது வீட்டுக்கு அழைக்கும் நிகழ்ச்சியை தடை உத்தரவை மீறி 200-க்கும் மேற்பட்டவர்களை, ஒரே இடத்தில் அழைத்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் நடத்துகிறார்கள். அத்தியாவாசிய பொருட்கள் வாங்க செல்பவர்களிடம் காட்டும் சட்டத்தை இதுபோன்று விதிகளை மீறுபவர்களிடம் கடுமையாகக்காட்டி சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான் என்பதை வருவாய் மற்றும் காவல்துறை ஏற்படுத்தவேண்டும். அதே நேரத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது டவுன் வி.ஏ.ஓ. புகாரின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT