ADVERTISEMENT

பருத்தி விற்பனை தொழிலதிபர் வீட்டில் 13 லட்சம் கொள்ளை; போலீசார் விசாரணை

05:38 PM Jan 26, 2024 | kalaimohan

பட்டப் பகலில் தொழிலதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு 13 லட்சம் பணம் மற்றும் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி வீதியில் வசித்து வருபவர் கமலேஷ். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் பருத்தியை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் அதிபராக இருந்து வந்தார். இவர்களது வீட்டின் கீழ்தளத்தில் அலுவலகமும் மேல் தளத்தில் வீடும் இருந்தது. நேற்று தைப்பூசம் என்பதால் சாமி வழிபாட்டிற்காக கமலேஷ் அவருடைய குடும்பத்துடன் மருதமலை கோவிலுக்கு சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அவருடைய நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் கீழ்தளத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் பருத்தி வியாபாரம் பேசுவது போல் காரில் வந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கீழ் தளத்தில் இருந்த ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு மேல் இருந்த வீட்டிற்கு சென்று தேடி உள்ளனர். அங்கு கமலேஸின் மனைவி ரூபல் உள்ளே இருந்துள்ளார். அவருடைய வாயை துணியால் அடைத்து கைகளை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்த சுமார் 50 சவரன் நகை மற்றும் 13 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் வட மாநில தொழிலதிபர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT