ADVERTISEMENT

“துணிந்தால் வெற்றி உனதே..” - மாஸ் காட்டிய மாணவி

01:21 PM May 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி நந்தினி, “நல்லா வரும் என்று நினைத்தேன், ஆனால், இவ்வளவு நல்லா வரும் என்று நான் நினைக்கவேயில்லை. எனது பெற்றோர், ஆசிரியர்கள் என எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. நமக்கு யாராவது மோட்டிவேசன் கொடுக்கனும்னு அவசியமில்லை. நாம் எப்படி ஆகவேண்டும் என்று நினைத்து அதற்காக முழுவதும் உழைத்தோம் என்றால் கண்டிப்பாக நினைத்ததை அடைந்துவிட முடியும். நாம் நினைத்தோம் என்றால் யார் துணையும் இல்லாமல் மேலே வரமுடியும். ஆனால் எல்லாருக்கும் நல்ல கல்வி இருக்கிறது, ஊக்கம் கொடுக்க ஆள் இருக்கிறார்கள். அதனால் எல்லாராலும் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். எதுவும் இல்லை என்று சொல்லாதீர்கள், இருப்பதை வைத்தும் நம்மால் வாழ்கையில் வெல்ல முடியும். எனது வெற்றிக்கு எனது பெற்றோர் முக்கியக் காரணம் நான் படிக்கும்போது எனக்கு எந்த தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.” என்றார்.

செய்தியாளர் ஒருவர் அடுத்தது என்ன என்று கேட்டதற்கு, மாணவி நந்தினி, “சி.ஏ படிக்க வேண்டும்” என்றார். எதனால் அதனைத் தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, “நான் எனது சொந்தக் காலில் நிற்க விரும்புகிறேன். அதனால் அதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.

மாணவியைத் தொடர்ந்து பேசிய அவரின் ஆசிரியர், “எங்கள் பள்ளியில் படித்த மாணவி நந்தினியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. முதலாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில்தான் படித்துள்ளார். 10 ஆம் வகுப்பில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்தார். அதனையடுத்து 11 ஆம் வகுப்பில் 600க்கு 598 மதிப்பெண் எடுத்திருந்தார். இப்போது 600க்கு 600 மதிப்பெண் எடுத்து பெருமை சேர்த்திருக்கிறார். மாணவி நந்தினி எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது பெரிய வரம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT