ADVERTISEMENT

கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்தது காவிரிக்காகவா ? விஸ்வரூபம் -2 படத்திற்காகவா ? - ஈஸ்வரன்

07:07 PM Jun 04, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தது காவிரிக்காகவா ? விஸ்வரூபம் -2 படத்திற்காகவா ? என்று சந்தேகத்தை எழுப்புகிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

இது குறித்த அவரது அறிக்கை: ’’காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில், இன்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சினையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடத்தில் காவிரி பிரச்சினையை இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லிவிட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதேபோல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சினைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சினையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது. எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். ’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT