ADVERTISEMENT

புதிய கல்வி கொள்கை ஆலோசனையில் ஏன் கலந்துகொள்ளவில்லை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

04:56 PM May 17, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் அமைச்சரும் பங்கேற்காமல் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை; நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வராததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனுப்பிய சுற்றறிக்கையில் புதிய கல்விக் கொள்கை குறித்த மூன்று முக்கிய அம்சங்களை விவாதிக்க வேண்டும் கல்வியில் மாற்றம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த செயல்பாடுகள் மாநிலங்களில் கல்வி நிலை உள்ளிட்டவற்றை ஆலோசிக்க நேரில் வருமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கையில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்ற கூடிய அமைச்சருடைய பெயரை அதில் இணைக்காமல் மின்னஞ்சல் வந்ததால் பள்ளிக்கல்வித்துறை மத்திய அரசுக்கு மீண்டும் அமைச்சருக்கு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் ஒரு விரிவான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று பதிலளித்து இருந்தோம். அதற்கு எந்தவித பதிலும் மத்திய அரசிடம் இருந்து திரும்பி வராததால் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.

குலக் கல்வி முறையைத் திணிக்கப் பார்க்கிறார்களே என்ற என்ற அச்சம் இருக்கிறது. 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் வீதம் ஒதுக்கி ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்கள் கல்வி கற்பதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளுபவர்கள் யார் எதைப் படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது வளர்ந்த நாடுகளில் கூட இந்த முறை இல்லை. அதேபோல் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பது கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசினுடைய இந்த கல்விக் கொள்கையில் நாங்கள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகளின் மனநிலையைப் பொருத்தும் அவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க விரும்பாத தான் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

கல்வி தொலைக்காட்சியை இன்னும் சற்றுக் கூடுதலாக மேம்படுத்தி புதிய முனைப்போடு மாணவர்கள் அதை ஆர்வமுடன் கவனித்துப் படிக்க உறுதுணையாகத் தொலைக்காட்சி மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு மத்தியிலிருந்து பதில் திரும்பப் பெறவில்லை என்றால் நாங்கள் முதலமைச்சரோடு தொடர்புகொண்டு அவரோடு ஆலோசனை செய்து மீண்டும் அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

12ஆம் வகுப்புக்கான தேர்வை நாங்கள் முறைப்படி திட்டமிட்டு அறிவித்து அதன் பிறகுதான் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு எந்த விதத்திலும் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பாமல் நிறையச் சரியாகத் திட்டமிடப்பட்டு உரிய நேரத்தில் இந்த தேர்வு முறையாக நடத்தப்படும். 2019ல் திமுக சில திருத்தங்களை மத்திய கல்விக் கொள்கையில் கொடுத்திருந்தது. அது எல்லாம் முழுமையாகச் செலுத்திய பின்னரே புதிய கல்விக் கொள்கையை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT