ADVERTISEMENT

எச்.ராஜாவுக்கு இந்த திமிரும், தைரியமும் யார் கொடுத்தது? வைகோ ஆவேசம்!

05:37 PM Mar 08, 2018 | Anonymous (not verified)


எச்.ராஜாவுக்கு இந்த திமிரும், தைரியமும் யார் கொடுத்தது? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில் சிலையா? மராட்டிய மாவீரர் சிவாஜிக்கு 3500 கோடியில் சிலையா? என்று நான் கேட்கவில்லை. டெல்லியில் இருந்து இன்று காலை தமிழகம் தரும்பிய எச்.ராஜா மீண்டும் பெரியாரை தாக்குவதற்கு காரணம் என்ன? பிரதமர் மோடி கொடுக்கும் ஆதரவு. அது எச்.ராஜாவின் குரல். பின்னணி குரல் மோடியின் குரல். அமித்ஷாவின் குரல். எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமித்ஷா சொல்கிறார். எச்.ராஜாவின் பின்புலத்தில் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்.

இங்கே பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்ன இரவில் 2 பேர் பெரியார் சிலையின் முகத்தை சிதைத்திருக்கிறார்கள். அதை டீக்கடைக்காரர் பார்த்து அவர்களை பிடித்து கொடுக்க வேண்டியதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்கு பிறகும் இந்த திமிரும் தைரியமும் எச்.ராஜாவுக்கு யார் கொடுத்தது. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். அதை சட்டமாக்கி கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தில் எச்.ராஜாவை குரங்கு குட்டியை விட்டு தண்ணீரில் ஆழம் பார்ப்பது போல அவரை பேச விட்டு தமிழர்களின் உணர்வுகளை சோதித்து பார்க்கிறார்கள். தமிழர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். வேங்கைகள் உலவும் காடுகளில் நரி ஊளையிடுவது போல எச்.ராஜா பேசி வருகிறார்.

பெரியார் பற்றி சொன்ன கருத்துக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகம் பெரியாரின் கோட்டை. அந்த கோட்டையின் காவலர்களாக நாங்கள் இருக்கிறோம். கோட்டையை சரித்து பார்க்கலாம் என்று பா.ஜ.க அரசு நினைக்கிறது. அந்த கோட்டையை நாங்கள் உயிரைக் கொடுத்தாவது காப்போம். எச்.ராஜா இதுபோல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT