ADVERTISEMENT

''இது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது... இந்த கட்சி இருக்க வேண்டுமா வேண்டாமா...''-செல்லூர் ராஜூ ஆவேசம்!

05:46 PM Jun 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''இது உட்கட்சிக்குள் நடக்கக்கூடிய பிரச்சனை. இப்பொழுது அதை பூதாகரமாகக் கொண்டுவந்து விமர்சனம் செய்கிறார்கள். இதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. திமுகவில் என்ன ஜனநாயக முறை இருக்கிறது. திமுகவில் சாதாரண தொண்டன் முதலமைச்சராக முடியுமா? ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது இந்த கட்சி தான், இது மாதிரி எத்தனை விஷயங்களை சொல்லலாம். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இப்படி எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுகதான். இந்த கட்சி இருக்க வேண்டுமா வேண்டாமா... திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்னைக்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? சினிமா துறை சுதந்திரமாக செயல்பட முடிகிறதா? இந்த கட்சி ஒன்னுதாங்க 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்திருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை வழங்கியுள்ளது. 'ஆட்சி அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்கு அல்ல, ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்கின்ற பணி. நாங்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சேவகனாகதான் இருப்போம்' என்று எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட கொள்கை உடையவரின் நோக்கத்தை நிலைநாட்ட அதிமுக தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து நானே செய்தியாளர்களைச் சந்தித்து நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்குப் பதில் சொல்வேன். இப்பொழுது நான் சொல்வது என்னவென்றால் அதிமுக தொண்டர்கள், குறிப்பாக ஜாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி இந்த இயக்கத்தை பிரிப்பதற்கு யார் எத்தனித்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். எம்ஜிஆரை பொறுத்தவரை ஜாதி பார்த்தது கிடையாது, மதம் கிடையாது. நாம் எப்பொழுதுமே மதசார்பற்ற இயக்கமாக இருந்திருக்கிறோம். இந்த இயக்கமும் அப்படித்தான். ஒரு நாயரை தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி அதிமுக, ஒரு பிராமணப் பெண்ணை தலைமையாகக் கொண்டு இயங்கிய கட்சி அதிமுக, சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓபிஎஸ்-இபிஎஸ் இன்றைக்கு முதல்வர்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் இந்த கட்சி தான். எனவே இதைத் தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். நான் சின்ன வயசிலிருந்தே எம்ஜிஆர் படம் பார்த்தவன். எனக்கு அப்பனும் எம்ஜிஆர்தான்... தலைவனும் எம்ஜிஆர் தான்.. வழிகாட்டியும் எம்ஜிஆர் தான். அதன் பிறகு என் தலைவி. இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் இருக்க வேண்டும். இந்த இயக்கம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து வரும். எவனாலும் எங்களை அசைக்க முடியாது. எங்கள் தொண்டர்களைப் பிரித்து வேறு கட்சியில் சேர்த்து விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அவர்கள் நினைப்புதான் தவிடு பொடியாகிவிடும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT