Skip to main content

ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் சேரவேண்டாம், இருவரும் இணைந்து ஒட்டுமொத்த அதிமுகவையும்...

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

இந்த ஒருவாரமாக இந்து அறநிலையத்துறை, இருக்கும் கோவில்களுக்கெல்லாம் ஒரு வேலை கொடுத்திருக்கிறது... என்ன, திருடுபோன சிலைகள் பற்றிய அறிக்கையா என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.
 

admk


அனைத்து கோவில்களிலும் மழை வரவேண்டி பூஜை செய்ய உத்தரவிட்டுள்ளது. மழை வேண்டி புல்லாங்குழல், நாதஸ்வரம் ஆகியவற்றை இசைக்க கூறியிருந்தனர். மேலும் சில மந்திரங்களை குறிப்பிட்டு அதை ஓதவும் உத்தரவிட்டிருந்தனர்.
 

இப்படியாக வடக்கின் வாடை தமிழ்நாட்டின் பக்கமும் வீச தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் அதிமுகவை பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. ஆனால் இருவருமே அதை மறுத்து வந்தனர். இந்நிலையில் இப்படியான செயல்களின்மூலம் அவர்கள் அந்த குற்றச்சாட்டை உறுதிசெய்கின்றனர். 
 

ஏனெனில் வட இந்தியாவில்தான் இந்தமாதிரி மழை வரவில்லையென்றால் பூஜை, அதிகமாக வந்தால் பூஜை, வறட்சி வந்தால் பூஜை என அனைத்திற்கும் பூஜை செய்வார்கள். அதையும் குறிப்பாக பாஜகதான் இதையெல்லாம் செய்யும். தமிழ்நாட்டில் அதையெல்லாம் எண்ணி நகையாடிக்கொண்டும், விமர்சித்துக்கொண்டும் இருந்தார்கள்.
 

admk


ஆனால் தற்போது இங்கேயே இப்படி நடக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம். இப்போது பூஜை செய்ய உத்தரவிட்ட அரசு, சென்னை வெள்ளத்தின்போது அழிந்த மரங்களை நடவில்லை. அடுத்தடுத்து வந்த புயல்களின்போது அழிந்த மரங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை. சாலையை விரிவாக்கம் செய்யும்போது இருமருங்கிலும் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களை அழித்தார்கள். எட்டுவழிச்சாலை, மீத்தேன், என அனைத்தையும் செய்துவிட்டு இப்போது பூஜை நடத்தினால் சரியாகிவிடுமா.

அழித்த மரங்களுக்கெல்லாம் என்ன மாற்றுவழி செய்துள்ளனர் என நீதிமன்றம் கேட்டதற்கும் பதிலில்லை. அதுமட்டுமில்லாமல் அதிக மழை பெய்த காலத்தில் மழையை சேமிக்காமல் வீணாக கடலில் கலக்க விட்டனர். குளம், குட்டை, ஏரிகளையெல்லாம் தூர்வாராமல் விட்டுவிட்டனர். ஆற்றில் தண்ணீரை பிடித்துவைக்கும் ஆற்றுமணலையெல்லாம் அள்ளி திருட்டு வேலைகளில் ஈடுபட்டனர். இப்படியாக மழை வருவதற்கும், வந்த மழை நீரை சேமிப்பதற்கும், ஆற்றுநீரை சேமிப்பதற்கும் எந்த வழியையும் மேற்கொள்ளாமல், இப்போது பூஜை செய்ய கிளம்பி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற, இத்தனை வருட திராவிட ஆட்சியில் ஒருவர்கூட, இந்த மாதிரியான மூடநம்பிக்கை முயற்சிகளை எடுத்ததில்லை. ஜெயலலிதா ஜெயிலிலிருந்து வெளியே வரவேண்டும் என்று மண்சோறு, யாகங்களெல்லாம் செய்தவர்கள், இதை செய்வதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. இது தமிழ்நாட்டிற்குதான் வெட்கக்கேடு. துணை முதல்வர். ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய போகிறார் என தங்க.தமிழ்செல்வன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படியே மூடநம்பிக்கையில் திளைத்து பூஜை, புனஸ்காரம் என இறங்கிவிட்டால் தமிழ்நாட்டின் இன்னொரு பாஜகவாக அதிமுக தானாக மாறிவிடும் என்பது உண்மையே.