ADVERTISEMENT

“தமிழ்நாட்டை திராவிட இயக்கச் சிந்தனையின் அடிப்படையில் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்..” - மு.க. ஸ்டாலின் 

11:20 AM Aug 07, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (07.08.2021) காலை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கலைஞரை நினைவுகூரும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் கலைஞர் நம்மைத் தவிக்கவிட்டு மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன! அவர் மறையவில்லை, நம்முள் இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டுதான் இருக்கிறார் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இன்னமும் கலைஞர் எங்கும் நிறைந்து நம்மை இயக்கிக்கொண்டுதான் இருக்கிறார்! நம் முன்னால் நின்று இயக்கிக்கொண்டிருக்கும் தலைவராகவும் முதலமைச்சராகவும்தான் நான் அவரைப் பார்க்கிறேன்!

திமுக ஆட்சி மலர வேண்டும் எனக் கனவு கண்டார். அந்தக் கனவை மூன்று மாதங்களுக்கு முன்புதான் உடன்பிறப்புகளின் உறுதுணையோடு நிறைவேற்றிக் காட்டினோம். திமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கலைஞர் கனவு கண்டாரோ, அத்தகைய கனவுத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம்!

கலைஞரின் சிந்தனையை நிறைவேற்றுவதைவிட அவருக்குச் சிறந்த அஞ்சலி இருக்க முடியாது அல்லவா?

தனக்குப் பிறகும் தான் இருந்து நடத்துவதைப் போலவே கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் கலைஞர். அந்த ஆசையை இந்த மூன்றாண்டு காலத்தில் நிறைவேற்றிவருகிறேன் என்பதே எனது நிம்மதிப் பெருமூச்சு!

‘இனி தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சியே’ என்ற பெரும் உறுதிமொழியை இன்று நாம் எடுப்போம்!

தமிழை, தமிழர்களை, தமிழ்நாட்டை திராவிட இயக்கச் சிந்தனையின் அடிப்படையில் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்!

நூற்றாண்டு காணப் போகும் கலைஞரே, உங்கள் புகழ் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT