ADVERTISEMENT

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்முடி தலைமையில் போராட்டம்... 

10:16 PM Jun 22, 2020 | rajavel

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட டி. புதுப்பாளையம் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்கள் பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளன. இந்த ஆற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மணல் சுரண்டப்பட்டு கட்டாந்தரையாக கிடைக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அப்பகுதி கிராமங்களில் விவசாயத்திற்கும், குடிக்கும் தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் மேற்படி பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அதிகாரிகள் முழுமூச்சில் இறங்கியுள்ளனர், மணல் குவாரி திறக்கக்கூடாது மூட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருக்கோவிலூர் தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் கிராம மக்கள் விவசாயிகள் திரண்டு சென்று குவாரியை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் பாண்டியன், தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அரசு தடை உத்தரவு காரணமாக போராட்டம் நடத்தக்கூடாது, கும்பல் கூடக்கூடாது என்று காவல்துறை கூறியது.

அப்போது பொன்முடி கூறுகையில், பெண்ணையாற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது, சமீபகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மணல் அள்ளுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள், அதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. மணல் குவாரி அமைக்க வேண்டுமானால் இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டு மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளனர். அவை வைத்துக்கொண்டு பொது மணல் குவாரி அமைக்க முயற்சி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இந்த குவாரியை உடனடியாக மூட வேண்டும். மூட மறுத்தால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்முடி கூறினார்.

அவருடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் கலந்து கொண்டனர். இந்த மணல் குவாரியை மூடக்கோரி வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் திருவெண்ணைநல்லூரில் நடத்தப்பட உள்ளது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு, மணல் குவாரிக்கு எதிராக மக்களின் போராட்டம் அனைத்து கட்சி ஆதரவுடன் விஸ்வரூபமெடுக்கும் என்கிறார்கள் பெண்ணையாற்றின் கரையோர கிராம மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT