ADVERTISEMENT

கரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால் நானே வேதாரண்யம் வந்திருப்பேன்... மு.க.ஸ்டாலின் பேச்சு 

10:36 PM Jul 22, 2020 | rajavel

ADVERTISEMENT

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (22-07-2020) முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.கே.வேதரத்தினம் பா.ஜ.க.வில் இருந்து விலகி, திராவிட முன்னேற்ற கழகத்தில் அவரது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அப்போது அவர்களிடையே காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

ADVERTISEMENT


வணக்கம்.


வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் வேதரத்தினம் உள்ளிட்ட நண்பர்கள் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வருகை தரக்கூடிய இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இது கரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால் நானே வேதாரண்யம் வந்திருப்பேன். அல்லது நீங்கள் அனைவரும் சென்னைக்கு வந்திருந்தால், அண்ணா அறிவாலயத்தில் மிகச்சிறந்த வரவேற்பை உங்களுக்கு கொடுத்திருப்பேன்.


அந்த இரண்டு சூழலும் இப்போது இல்லை. எனவே காணொலிக் காட்சி மூலமாக கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடக்க வேண்டியதாயிற்று!


காணொலி மூலமாக கல்யாணங்களே நடக்கும் போது, கழகத்தில் இணைதலும் நடத்தலாம், தாமதம் செய்ய வேண்டாம் என்று நானே சொன்னேன்.


உங்கள் அனைவரையும் கழக தலைவர் என்ற முறையிலும், உங்களில் ஒருவன் என்ற முறையிலும் வருக வருக என வரவேற்கிறேன்.


வேதரத்தினம் அவர்கள் கழகத்தில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் துடிப்புடன் செயல்பட்டவர். அவர் வேறொரு கட்சிக்கு போனார் என்று கூட நான் சொல்ல மாட்டேன். வெளிநாடு போய்விட்டால் நாம் ஒருவரைப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோல வெளிநாடு போய்விட்டு இப்போது மீண்டும் கழகத்துக்குள் அவர் வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

திரும்பி வந்ததன் மூலம் அவர் உண்மையான பாசம், அன்பு உள்ளவர் என்பதை நிரூபித்துவிட்டார்.


வேதாரண்யம் என்றால் வேதரத்தினம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு முத்திரை பதித்த அவரையும் அவரோடு சேர்ந்து இணைந்திருப்பவர்களையும் வருக வருக என வரவேற்கிறேன்.


நாட்டின் இன்றைய நிலைமை பற்றி நான் எதுவும் புதிதாக உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்களே நேரடியாக பார்த்து வருகிறீர்கள்.

கரோனா குறித்து மத்திய - மாநில அரசுகள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாகத்தான் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள், பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.


கேரளாவுக்குள்தான் முதன்முதலில் கரோனா வந்தது. அதனை அம்மாநில அரசு மறைக்கவில்லை. உடனே மக்களை உஷார் படுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது. அதனால் அந்த மாநிலத்தில் மொத்தமே கரோனாவால் பாதிக்கட்டவர்கள் 14 ஆயிரம் பேர் தான். ஆனால் தமிழ்நாட்டில் 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கேரளாவில் 44 பேர் இறந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 2179 பேர் வரை இறந்துள்ளார்கள்.

திரு. பழனிசாமி அவர்களின் ஆட்சி எவ்வளவு மோசமான கொடூரமான கையாலாகாத ஆட்சி என்பதற்கு இதுதான் மிகப்பெரிய உதாரணம்.


மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகள் சலுகைகள் செய்து மக்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். ஊடரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு 5 ஆயிரம் கொடுங்கள் என்று மூன்று மாதங்களாக சொல்லி வருகிறேன். அரசு தரவில்லை.


அதை தராதவர்கள், மின் கட்டணம் என்ற பெயரால் கொள்ளையடித்து வருகிறார்கள்.


கரோனா நோய்த் தொற்று ஒருபக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அரசு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது.


இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்க்கு வேலை இல்லை; ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. அதை மனதில் வைத்து மின்கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் திரு. பழனிசாமி அவர்களின் அரசு மின்கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.


மின்கட்டணம் அதிகமானது ஏன் என்று கேட்டால், 'அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள், அதனால் மின்சாரம் அதிகமாகச் செலவாகி இருக்கும்' என்கிறது அரசு. கரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு இது என்ன தண்டனையா? தண்டத் தொகையா?


கரோனா காலத்தில் அரசாங்கம் செய்யும் வழிப்பறிக் கொள்ளை இது?


மாநில அரசு இப்படி இருக்கிறது என்றால், மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

நூறு ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வைத்திருக்கும் இடஒதுக்கீட்டை, சமூகநீதியைச் சிதைக்கும் காரியத்தை செய்து வருகிறது. இந்த சமூகநீதியை நாம் காப்பாற்றியாக வேண்டும். இது 'பெரியாரின் மண் - அண்ணாவின் மண் - கலைஞரின் மண்' என்பதை நாம் நிரூபித்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டும்.


இந்த நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களைப் படிக்க விடாமல், முன்னேற விடாமல், தட்டிப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


கரோனாவில் இருந்து மக்களையும், மக்களுக்கான சமூகநீதியையும் காப்பாற்ற வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் நீங்கள் அனைவரும் கழகத்தில் இணைந்துள்ளீர்கள்.

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் களமும் நம்மை அழைக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகம் எல்லா வகையிலும் பின்தங்கிவிட்டது.

இதிலிருந்து தமிழகத்தை மீட்க திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டும்.


அத்தகைய தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன்.


மாவட்ட கழக செயலாளர், கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் அனைவருடனும் இணைந்து தோளோடு தோள் கொடுத்து பணியாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.


கரோனா நம்மை விட்டு விடைபெற்றதும் உங்களை நேரில் சந்தித்து மீண்டும் ஒருமுறை வரவேற்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். நன்றி. வணக்கம்."


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT