ADVERTISEMENT

சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை பாராட்ட இதுதான் காரணம்! வானதி சீனிவாசன் பேட்டி!

05:02 PM Nov 10, 2018 | rajavel



பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பு பாஜகவுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுகவினர் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேள்விகளை முன் வைத்தோம்.

ADVERTISEMENT

மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களில் உள்ள தலைவர்களையும், முதல் அமைச்சர்களையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து வருகிறார். அந்த அடிப்படையில் திமுகவின் ஆதரவு வேண்டும் என்று என்னை கேட்டார். நான் மனப்பூர்வமாக ஆதரவு தருவதாக உறுதி தந்திருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தான் செய்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு அனைவரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். இதில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவர்கள், ஜனநாயகத்தினுடைய விரோதத்தன்மையின் காரணமாக பாஜக அரசை அகற்றுவோம் என்கிறார். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலை எப்படி ஜனநாயகத்தோடு நடத்தினார்கள். உயர்நீதிமன்றமே எப்படி தலையிட நேர்ந்தது என்று அவர் நினைத்து பார்த்தார் என்றால் இப்படி பேச மாட்டார்.

அந்த நீதிமன்றமாக இருந்தாலும், சி.பி.ஐ.யாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியாக இருந்தாலும் அந்த அமைப்புகளை கூட மிரட்டுகின்ற, அச்சுறுத்துகின்ற நிலையில்தான் மோடி தலைமையில இருக்கும் பாஜக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறாரே?

இன்று நிர்வாகத்தில் இருக்கக்கூடிய அமைப்புகளில் நடைமுறையில் சில நேரத்தில் அதிகாரிகளுக்குள் சிக்கல்கள் எழுவது சகஜனமான ஒரு விஷயம். ஆனால் எந்த நேரத்திலும் அமைப்பினுடைய செயல்பாட்டிற்கு களங்கம் விளைவிக்காமல் அதில் சுமூகத்தன்மையோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அரசாங்கம் அதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்டாலின் அவர்கள் சொல்கின்ற எந்த ஒரு குற்றச்சாட்டுக்களுமே பாஜக அரசு வேண்டுமென்றே அமைப்புகளின் செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கிறது என்று சொல்ல முடியாது.


பாஜகவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற ஒரே எண்ணத்தோடு பயணம் செய்ய முடிவெடுத்துதான் அணி திரண்டு வருகிறோம். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. எங்கள் அணியில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர். மோடியைவிட ஸ்டாலின் சிறந்த நிர்வாகிதான் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறாரே?

இன்று சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு ஏதோ ஒரு பற்றுதல் தேவைப்படுகிறது. ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. ஏதாவது ஒன்றை சொல்லி தலைவர்களை சந்திக்க காரணம் வேண்டும். எப்படி புகழ்ந்தால் தலைவர்கள் அவரோடு நிற்பார்களோ அதற்காக புகழ்ந்து கொண்டிருக்கிறார். இதே சந்திரபாபு நாயுடுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடியை எப்படியெல்லாம் புகழ்ந்தார் என்று அனைவருக்கும் தெரியும். இன்று அரசியல் காரணங்களுக்காக வெளியே வந்துவிட்டு, தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்கு வருகின்ற புகழ் வார்த்தைகள் அது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது என்று கனிமொழி கூறியுள்ளாரே?

பாஜகவுக்கு எந்த பதட்டமும் இல்லை. இந்த மாதிரி கூட்டணியை நிறைய நாங்கள் பார்த்தவர்கள். சந்திரபாபு நாயுடு ஆரம்ப காலத்தில் இருந்து கூட்டணியிலும் இருந்திருக்கிறோம். கூட்டணி இல்லாத காலத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கூட்டணியில் இருந்து மத்திய அரசிடம் இருந்து அத்தனை உதவிகளையும் வாங்கிக்கொண்டு அமராவதியில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்காதவர், இன்று இங்கு வந்து மிகப்பெரிய கூட்டணி வைப்பதாக சொல்வது விந்தையாக இருக்கிறது. அவருடைய மாநிலத்திலேயே அவரால் தாக்கு பிடிக்க முடியாது. அவர் ஏதோ ஒரு பெரிய கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஒருபோதும் மோடிக்கு எதிராக இவர்களால் ஒரு தலைவரை அடையாளம் காண முடியாது. இவ்வாறு கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT