ADVERTISEMENT

கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்களே அனுதாப வார்த்தைகளாவது சொன்னீர்களா - வைகோ

12:49 PM Apr 05, 2019 | Selvakumar.k

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து ம.தி.மு.க.வின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கூட்டத்தில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட திமுக, மதிமுக மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அங்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து வைகோ பேசினார்.

"நாட்டிற்கு பேராபத்து வந்திருக்கும் சூழலில் பாராளுமன்ற தேர்தலை நாம் சந்தித்துவருகிறோம். ஆபத்து வெளியிடங்களில் இருந்து வரவில்லை, வெளிநாடுகளில் இருந்து வரவில்லை, இந்துத்துவா அமைப்புகளின் சார்பில் அவர்களது கோரகுரலாக நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்திருக்கிறது.

பிரதமர் மோடி இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்வதை அப்படியே திரித்து மாற்றி இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்று மாற்றி சொல்லி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.

இந்துத்துவா வன்முறையில் ஈடுபட்டதுண்டா என்று கேட்கிறீர்களே மறந்துவிட்டீர்களா கோட்சேவால் காந்தியைக் சுட்டுக் கொண்றீர்களே மறந்துவிட முடியுமா? இரண்டு மாதங்களுக்கு முன்பு அலிகரில் காந்தியின் பொம்மையில் துப்பாக்கியால் சுட்டு ரத்தம் கசிவது போல் காட்சியமைத்தீர்களே மறந்துவிடமுடியுமா? அந்த கொலைகார கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைவைப்போம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்வது நெஞ்சை பதற வைக்கிறது.

இதற்கெல்லாம் சாதாரன கண்டனம்கூட தெரிவிக்காத பிரதமர் மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் தகுதியை அடியோடு இழந்துவிட்டார்.

மேகதாதுவில் அணை கட்டினால் மேட்டூர் முதல் கல்லணை வரை எங்கும் தண்ணீர் வராது, இதனால் தமிழகமே பட்டினி பிரதேசமாக மாறிவிடும். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாக மாறும், பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயுக்களை எடுத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.

மோடி அவர்களே, கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்கள் அனுதாப வார்த்தைகள் சொன்னீர்களா, உலக நாடுகளுக்கெல்லாம் சென்று வந்த பிரதமர் ஒப்புக்காவது வந்து பார்த்தீர்களா, விவசாய கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய மாட்டீர்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ 5 லட்சம் கோடி வரிச்சலுகை, ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி விஜய் மல்லையா ரூ 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடி ரூ 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தப்பி செல்ல வழி வகுத்திருக்கிறீர்களே.

விக்ரம் கோத்தாரி ரூ 3850 கோடி மோசடி செய்து ஓடிப்போனார், ஆந்திராவில் நிக்கில் சுரேஷா மூன்று வங்கிகளில் ரூ 2500 கோடி மோசடி செய்து வெளியேறினார். இதற்க்கு எல்லாம் காரணம் கார்ப்ரேட் முதலாளிகளின் ஆதரவாளரான பிரதமர் மோடிதானே காரணம்.


நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னாலே தமிழக அரசு நடுங்கி ஒடுங்கி விடுகிறது. இதற்கு காரணம் பருப்பு, ஆம்னி பஸ் ஊழல், கல்வித் துறை, பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறைகளில் ஊழல், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்த அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித்துறை மூலம் ரெய்டு நடைபெற்றது, நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் இதற்கு என்ன பதில் என்று இதுவரை கூற முடியவில்லை.

தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக வந்த போர்டு நிறுவனத்திடம் அதிமுக அரசு கமிஷன் அதிகம் கேட்டதால் குஜராத்துக்கும், வேறுமாநிலத்திற்கும் சென்றுவிட்டனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சித்தூருக்கு சென்றுவிட்டது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ 7 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் தொடங்க வந்த நிறுவனம் இவர்கள் கேட்ட கமிஷன் தொகையால் அவர்கள் போட்ட முதலீட்டுத் தொகையை விட பெருந்தொகை என கூறி அனந்தபூர் சென்றுவிட்டது.


தமிழகத்தில் நடைபெற்ற ஓசூர் தர்மபுரி ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் ஆளும் கட்சி பிரமுகரின் பிள்ளைகள் நடத்திய பாலியல் வன்முறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூடி மறைத்ததால் 200 பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள், இது தமிழக அரசு காவல்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கூலிப்படையினர் போல் திட்டமிட்ட படுகொலை.

முப்படை ராணுவ வீரர்கள் எங்கள் காவல் தெய்வங்கள் எந்தக் கட்சிக்கும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆணி செய்வதற்கு கூட அனுபவம் இல்லாத அம்பானி நிறுவனம் ரபேலில் அனுமதி பெற்றது.


தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை ரிமோட் கண்ட்ரோல் மத்திய அரசு இயக்கப்பட்டு வருகிறது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றசாட்டிவருகின்றனர். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு வருகிறோம். மத்திய, மாநில ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து செய்து, மாநில கல்வி பட்டய பட்டியலுக்கு கொண்டு செல்வோம் என பல்வேறு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை இடம் பெற செய்ததை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று மழை அடித்து ஓய்ந்தது போல் பேசிமுடித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT