ADVERTISEMENT

முதல்வர் போட்டியில் இருவர்; திரிபுரா விரைந்தார் அசாம் முதல்வர் 

05:20 PM Mar 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கையானது கடந்த 2 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை நடந்த தேர்தலை விட 4 இடங்கள் குறைவாகும். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிபுரா பூர்வகுடிகள் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டும் வென்றுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் மாணிக் சாகா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் மாணிக் சாகாவுடன் மத்திய அமைச்சராக உள்ள பிரதிமா பௌமிக் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் மாணிக் சாகாவிற்கு ஆதரவு தருகின்றனர். மற்றொரு பிரிவினர் பிரதிமா பௌமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது.

மேலும் திரிபுரா மாநில அமைச்சரவை பதவியேற்பானது வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்க அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை பாஜகவின் டெல்லி தலைமை திரிபுராவிற்கு அனுப்பி வைத்துள்ளது. பாஜகவின் டெல்லி தலைமை ஆதரவு மாணிக் சாகாவிற்கு இருப்பதாகவும், மேலும் துணை முதல்வர் பதவியை பிரதிமா பௌமிக்கு வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இதனால் திரிபுரா மாநில பாஜக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT