ADVERTISEMENT

"தி.மு.க. கூட்டணியுடன் உடன்பாடு எட்டப்படவில்லை" - ஈஸ்வரன் பேட்டி!

07:45 PM Mar 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், மற்ற கட்சிகளுடன் தி.மு.க. தலைமை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை, உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், "ஒதுக்கப்பட்டுள்ள 1 சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடும். பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியை ஒதுக்கீடு செய்ய தி.மு.க. தலைமையிடம் கேட்டுள்ளோம்" என்றார்.

அதேபோல், தி.மு.க. கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், "ஒதுக்கீடு செய்த 1 சட்டமன்றத் தொகுதியில் ஆதித் தமிழர் பேரவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்" எனத் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒதுக்கப்பட்டுள்ள 1 சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் விடுதலைக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் முருகவேல் ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, தி.மு.க.வுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், "தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT