
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் முன் இன்று (17/03/2021) விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் ஆணையத்தின் முடிவின் படி தபால் வாக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது, தேர்தலில் ரகசியத்தைப் பாதிக்கும்" என வாதிட்டார். அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர், "தற்போது வழங்க உள்ள தபால் வாக்கு என்பது விருப்பத் தேர்வு தான்" என்று விளக்கம் அளித்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதி தர தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. தபால் வாக்கு தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை" என வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதி அளித்து, கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவுகளை எதிர்க்க, இந்த வழக்கில் மனுதாரருக்கு தகுதியில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.