ADVERTISEMENT

வேட்பாளர் பட்டியல் - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை!

05:31 PM Mar 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் அ.தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக கூட்டணியின் உள்ள த.மா.கா., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் தே.மு.தி.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்தபோதும், தொகுதிப் பங்கீடு இறுதியாகாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது.

மற்றொருபுறம் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட கட்சிகளுடன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளதாக தகவல் கூறுகின்றன.

இந்த ஆலோசனையில் அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை குறித்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகளை அ.தி.மு.க. தலைமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இதில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் அமைச்சர் சி.வி.சண்முகமும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT