ADVERTISEMENT

திருவண்ணாமலை தொகுதிக்காக மோதும் பாஜக.. - விட்டுத்தர தயங்கும் அதிமுக..!

04:12 PM Mar 06, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 சட்டமன்ற தொகுதிகளில் திருவல்லிக்கேணி, ஆம்பூர், கே.வி.குப்பம், போளுர், திருவண்ணாமலை, பழனி, கோவை போன்ற தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக தரப்பில் பட்டியல் தரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஜகவின் தமிழக தலைவர் முருகன், திருவண்ணாமலை தொகுதி வேண்டும் என முரண்டு பிடிக்கிறார். போளுர் தொகுதியை பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை கேட்கிறார். கே.வி.குப்பம் தொகுதி வேண்டுமென முன்னாள் மேயரும் மாநில மகளிரணி செயலாளர்களுள் ஒருவரான கார்த்திகாயினி காய் நகர்த்துகிறார். வானதி சீனிவாசன் கோவையில் ஒரு தொகுதியைக் குறிவைத்துள்ளார்.

இதில் திருவண்ணாமலை தொகுதியில் ஆரம்பத்தில் போட்டியிட ஆர்வம் காட்டிய தொகுதி பொறுப்பாளர் தணிகைவேல், கள நிலவரத்தைப் பார்த்து வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் நான் போட்டியிடவில்லை எனச் சொல்லியுள்ளார். இந்நிலையில் மீண்டும் மாநிலத் தலைவர் வழியாக திருவண்ணாமலை தொகுதி வேண்டும், எனக்கு வாங்கி தாருங்கள் என கேட்பதாகவும், அவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சப்போர்ட் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த சில பிரமுகர்கள் நம்மிடம், தமிழக தேர்தல் பொறுப்பாளராக சில தேசிய தலைவர்கள் இருந்தாலும், உண்மையில் தமிழக தேர்தல் களத்தில் பாஜகவுக்காக பணியாற்றுபவர் முன்னாள் மத்தியமைச்சரும், இப்போது பெரிய பதவியில் உள்ள ஆந்திரா பிரமுகர்தான். அவர்தான் யாருக்கு சீட் தரலாம் என்பதைக் கூட முடிவு செய்கிறார். நாங்கள் வாங்கியுள்ள 20 தொகுதிகளில் பாதி தொகுதிகள் எதுஎதுவென முடிவாகிவிட்டது. அதற்கான வேட்பாளர்களும் முடிவாகிவிட்டார்கள்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி கார்த்திகாயினிக்கு என்பதும் உறுதியாகிவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தொகுதிக்கு சி.ஏழுமலை என்பது 90 சதவிதம் உறுதி. இதேபோல் வானதி சீனிவாசன் உட்பட சிலருக்கான தொகுதிகளும் முடிவாகிவிட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியைக் குறிவைத்த வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் தணிகைவேல், பின்பு வேண்டாம் என ஒதுங்கினார். திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவுக்கு நெருக்கடி தருகிறேன் எனச் சொல்லியே பாஜகவில் இணைந்தவர். அவருக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எங்கள் தலைமையும் வாக்குறுதி தந்தது. தொகுதியில் செலவு செய்து வலம் வந்தவர், பின்னர் திடீரென சைலண்டாகிவிட்டார்.

தொகுதிகளுக்கான மறைமுக பேச்சுவார்த்தையின்போது அதிமுக தலைமை, மாவட்ட தலைநகரம் அமைந்துள்ள தொகுதியை எங்களுக்கு ஒதுக்க தயக்கம் காட்டினர். ஆனாலும் அந்த தொகுதியில் வேலுவை எதிர்த்துப் போட்டியிட அதிமுக பிரமுகர்கள் தயக்கம் காட்டியதை தொடர்ந்து எங்களுக்கே தள்ளிவிட முடிவு செய்தது. தணிகைவேல் ஆர்வம் காட்டாததால் நாங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது மீண்டும் தொகுதி வேண்டுமென தலைவர் முருகனுக்கு நெருக்கடி தந்துவருகிறார் தணிகைவேல். ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்களே வேலுவை எதிர்த்து வெற்றிபெற முடியாது என பின்வாங்கும் சூழ்நிலையில் இவர் இப்போது மீண்டும் சீட் கேட்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்கள்.

திருவண்ணாமலை தொகுதி பாஜக கேட்கும் பட்டியலில் உள்ளது. அந்த தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்து தயாராக வைத்திருப்பதால், அதனை விட்டுத்தர அதிமுக தலைமை தயக்கம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற துவங்கியுள்ளன. இந்நிலையில், பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தணிகைவேல் - திருவண்ணாமலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT