Skip to main content

அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட பா.ஜ.க.நிர்வாகி!! திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய கூட்டம்... வெளிவந்த தகவல்!

 

dmk

 

தற்சார்பு இந்தியா என்கிறார் பிரதமர் மோடி. மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்களின் கோரிக்கைகளையும், இந்திய ஒன்றியத்தின் அங்கமான மாநிலங்களின் உரிமைகளையும் புறக்கணித்துவிட்டு தற்சார்பை அடைந்துவிட முடியுமா?

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில், எம்பிக்கள் திருப்பூர் கே.சுப்பராயன், நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ், கோவை பி.ஆர்.நடராஜன், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், கரூர் ஜோதிமணி, பொள்ளாச்சி கே.சண்முக சுந்தரம், திண்டுக்கல் ப.வேலுசாமி ஆகியோர் பங்கேற்ற மேற்கு மண்டல நாடாளுமன்ற எம்.பி.-க்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடந்தது.

எதற்காக இந்தக் கூட்டம் என கரூர் எம்.பி. ஜோதிமணியிடம் கேட்டோம். அதற்கு அவர், “எங்கள் பகுதியில் மின் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக மேற்கு மண்டல எம்.பி.-க்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைத்திருக்கிறோம். அதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மண்டலம் தமிழகத்தின் தொழில் நகரமாக இருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறைந்த இடமாக இருப்பதால் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் உள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் மண்டலமாகவும் உள்ளது.

தற்போதைய மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசிவைச் சந்தித்து அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நிலையில் கரோனா தொற்று உலகளவில் பிரச்சனையாக இருப்பதனால், மேற்கு மண்டல தொழில்களுக்கு மேலும் பின்னடைவு வந்துள்ளது. ஆகையால் மேற்கு மண்டலத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் 30 சதவிகித மானியத்துடன் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அரசுக்கு மக்கள் உழைத்துக்கொடுத்த வரிதான், வருவாயாக உள்ளது. அதன்மூலம், ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு இருக்கும் மக்களுக்கு, மாதாந்திர ரீதியாக உதவி செய்வது மத்திய மாநில அரசுகளின் கடமை. ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் வீதம் அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்கள் கொடுக்க வேண்டும். விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் கேட்டோம். அதையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

ஊரடங்கையும் வீண் செய்து, நோய் தொற்றையும் அதிகரிக்கச் செய்து, மக்களுடைய தியாகத்தை அர்த்தமில்லாமல் ஆக்கியுள்ளனர். கரோனா காலத்தில் ஊழல், கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. பத்து வெண்டிலேட்டர் வாங்குவதற்கும், துப்புரவு பணிகளுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்குவதற்கும் கரூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கியும் அதனை மாவட்ட நிர்வாகம் வாங்கவில்லை.

தொற்று அதிகமாகிக்கொண்டிருக்கிறது. மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தேசத்தின் எதிர்காலத்தோடும், நாட்டு மக்களின் நலனோடும் தங்களது சுய லாபத்துக்காக மத்திய, மாநில அரசுகள் விளையாடுகின்றன'' எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேற்கு மண்டல எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும், தமிழக அரசு கரோனா தடுப்பு பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை, கோவை மாவட்ட வழிகாட்டுதல் முறையை இதர மாவட்டங்களிலும் வழங்கிட வேண்டும்.

மேற்கு மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அரசு திட்ட நிகழ்ச்சிகள் குறித்து அந்த தொகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முறையாக தெரிவிப்பதில்லை, இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மீது பார்லிமெண்ட் உரிமை கமிட்டியில் புகார் கொடுப்பது, கரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.

நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அரசின் திட்டப் பணிகளில் குறைகள் இருப்பதை சுட்டிக் காட்டியதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அநாகரிகமான முறையில் நடந்து கொண்டு தகாத முறையில் பேசி தாக்க முற்பட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் தொலைகாட்சி விவாதத்தில் கரூர் எம்.பி.ஜோதிமணியிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பா.ஜ.க.நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.

இவற்றை மத்திய அரசுக்கு முறையாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று கூறிய மேற்கு மண்டல எம்.பி.க்கள் "தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்தில் 250 கோடி ரூபாய் மொத்த எம்.பி.க்கள் நிதியை மத்திய அரசு எடுத்துள்ளது. பாராளுமன்றம் எப்போது தொடங்கினாலும் இந்த விவகாரம் போராட்ட வடிவமாக மாறும் என்றார்கள்.

-ஜீவா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்