ADVERTISEMENT

பெண்களுக்கு ஆச்சரியத்தை அளித்த சந்திரபாபுவின் அறிவிப்புகள்; தேர்தலுக்குத் தயாராகும் தெலுங்கு தேசம்

10:51 AM Jun 17, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் நாளிலேயே பெண்களுக்குப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் கர்நாடகா மாநில பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து பெண்களுக்கு கர்நாடக மாநில அரசு பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டத்தை கடந்த 11 ஆம் தேதி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு குப்பம் சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "ஆந்திராவில் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். நான் மீண்டும் முதலமைச்சராக வருவேன். நான் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றவுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வருடத்திற்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மாநிலம் முழுவதும் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் தற்போது நடைபெறும் ஆட்சியில் அம்மாவின் மடி என்ற திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு மாணவனுக்கு மட்டுமே 15 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. நான் முதலமைச்சரான உடன் ஒரு குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பேன்" எனப் பேசினார். சந்திரபாபுவின் இந்த அறிவிப்புகள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT