ADVERTISEMENT

இபிஎஸ் - ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து சந்திப்பு; பாஜக ஆதரவு யாருக்கு?

10:43 AM Feb 03, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவியுள்ளதால் இது தொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், “தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறி இருந்தது. அதே சமயத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் அதிமுக - பாஜக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயருக்கு பதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதாகைகள் எதிலும் பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் கூட்டணி முறிந்ததா என்று சந்தேகம் வலுத்தது.

தொடர்ந்து அன்று மாலை அண்ணாமலை டெல்லி புறப்பட்டார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். அண்ணாமலையின் சந்திப்பினைத் தொடர்ந்து இன்று இபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனுத்தாக்கல் பிப்ரவரி 7 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இபிஎஸ் சந்திப்பினைத் தொடர்ந்து அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசி வருகிறார். இந்த சந்திப்பின் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே இருக்கும் மோதலை சமாதானப்படுத்த முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2024 தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக, அதிமுகவின் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயல்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவை இன்று அக்கட்சி அறிவிக்க உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT