ADVERTISEMENT

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

12:53 PM Apr 16, 2024 | mathi23

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT