ADVERTISEMENT

''இதுதான் அந்த ரகசியம்...''கரூரில் உதயநிதி; உள்ளாட்சியிலும் செந்தில் பாலாஜியின் பிரமாண்டம்

10:10 PM Feb 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சித் தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 9 ஆம் தேதி திமுக இளைஞர் அணிச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார்.

கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள். இதில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் பேசும்போது, "கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதியிலும் இம்மாவட்ட மக்களாகிய நீங்கள் திமுகவை வெற்றிபெற வைத்தீர்கள். அடுத்து வரப்போகிற கரூர் மாநகராட்சியிலும் தி.மு.க.வுக்கு வெற்றியைத் தேடி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற 8 மாதத்தில் மிகப்பெரிய சாதனையை நமது திமுக அரசு செய்துள்ளது. மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.

2 தவணைகளாக கரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 தரப்பட்டது. பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்குப் பேருந்துகளில் இலவச கட்டணம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48, மின் நுகர்வோர்களுக்கு மின்னகம் மூலமாக 24 மணி நேரச் சேவை என மக்கள் நேரடியாகப் பயன்பெறும் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். தமிழக அரசை பற்றி வட மாநில பத்திரிகை ஒன்று சர்வே நடத்தியுள்ளது. அதில் இந்தியாவில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளது. இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு தமிழக முதல்வர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என நேரில் சென்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக ஆளுநர் அதை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் ரகசியம் ஒன்று வைத்துள்ளார். அந்த ரகசியம் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். ரகசியம் இதுதான். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம். ஆளுநர் அவர்களே தற்போது நடைபெறுவது அடிமை அதிமுக ஆட்சி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மோடி தமிழகத்தைப் பார்த்து திருந்த வேண்டுமென ராகுல்காந்தி பேசி உள்ளார். தமிழக மக்கள் பாசிச பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர்.

வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 48 பேரில் ஒருநபர் ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். மீதமுள்ள 47 பேரை வெற்றி பெற வைக்க வேண்டியது மக்களாகிய உங்கள் பொறுப்பு" என்றார்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி உடனிருந்தார். இதுபோல தொடர்ந்து வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் உதயநிதி.

நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கரூர், தி.மு.க வுக்கு வந்த பிறகு மிகவும் துடிப்போடு, பாய்ச்சலாக பணியாற்றும் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அதிக இடம் வெற்றி பெற வைத்தார். சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரையும் தி.மு.க.வில் இணைய வைத்து அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அதேபோல் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு மாவட்டமாகக் கொடுக்கப்பட்ட கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.க. கட்டமைப்பை உடைக்க தொடங்கியுள்ளார். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பிரச்சார கூட்டமாக கோவையில் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் முதல்வர் சென்னையிலிருந்து பேசுவதை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மூன்று லட்சம் மக்களைப் பங்கு பெற வைத்திருக்கிறார். செந்தில் பாலாஜி என்றாலே பிரம்மாண்டம் என கோவை மாவட்ட அ.தி.மு.க. அலறுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT