ADVERTISEMENT

தமிழகத்தை மோடியிடம் இருந்து காப்பாற்ற, திமுக கூட்டணி வெற்றிபெறவேண்டும்; வைகோ

09:54 AM Apr 05, 2019 | Selvakumar.k

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சார களம் சூடுபறக்கிறது. அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்களின் ஆதரவு வேட்பாளர்களுக்கு வாக்குவேட்டை நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்தவகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான ராமலிங்கத்திற்கு கும்பகோணத்தில் வாக்கு கேட்டு பேசினார். அதனை தொடர்ந்து நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜுக்கும், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கலைவாணனுக்கும் ஓட்டு கேட்டு திருவாரூரில் பேசினார்.

"திராவிடர்களின் திருநகரங்கள் மூன்று, வெண்தாடி வேந்தர் பெரியார் பிறந்த ஈரோடு, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இந்த திருவாரூர் ஆகிய மூன்றும். கடந்த சட்டமன்றத்தேர்தலில் தமிழகத்தையே திகைக்கவைக்க கூடிய அளவில் அதிகவாக்கு வித்தியாசத்தில் கலைஞரை வெற்றி பெற வைத்தது இந்த திருவாரூர் மக்கள். ஆனால், கலைஞர் தற்போது நம்மோடு இல்லை அண்ணாவோடு அவருக்குப் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது சொந்த மண்ணில் இன்று நாம் பிரச்சாரம் செய்கிறோம். அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இருக்குமானால் திருவாரூரில் உதய சூரியனை மீண்டும் உதிக்கச் செய்வதுதான்.

கலைஞரின் மாநில சுயாட்சியை நிலைநாட்டிட, மத்தியில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட காங்கிரஸ் பேரியக்கம் மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திட, மீண்டும் திமுக வெற்றி பெற வேண்டும். ஊருக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டம் இன்று பாலைவனமாக மாற்றுவதற்கான திட்டத்தை மோடி அரசு நேரடியாகவே எடுத்துள்ளது. ரூ. 5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதோடு, அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்கிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீர்கூட மேட்டூருக்கு வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் அந்த திட்டம். தண்ணீர் இல்லாமல் போனால் இந்த நிலங்கள் பாழ்பட்டு பாலைவனமாக போகும். இந்த நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்க அதானிகளையும், அம்பானிகளையும், வேதாந்தா நிறுவனங்களையும், அனுப்புவார்கள், அவர்கள் வாங்குவது விளைவிப்பதற்காக அல்ல கீழே இருக்கும் இயற்கை வளங்களை சுரண்டவதற்காக.

இந்தியாவில் 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் படித்த பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால்ம, மோடி ஆட்சிக்கு வரும்போது இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என உலக மகா பொய் சொல்லிவிட்டு ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டார். ஆனால், 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை மோடி அரசு. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றனர், அதற்காக அக்கவுண்ட் ஓபன் செய்ய சென்றால் 5,100 ரூபாய் இல்லையென்றால் அவதாரம் போட வைத்தனர், இப்படியே 10,320 கோடியை வசூலித்தனர். சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஜி.எஸ்.டி. மூலம் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாடுகளில் உள்ள பெரு குடும்பங்களையும், பெருவணிகர்களையும் இந்தியாவிற்கு வருவதற்கு வாசலை திறந்து வைத்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் ஏஜென்ட் ஆகவே இருக்கிறது.

அதேவேளையில் விஜய் மல்லையா ரூ. 9 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். கர்லின் கம்பெனி ஓனர் ரூ. 9 ஆயிரத்து 500 கோடியை ஆந்திர வங்கியில் ஏமாற்றிவிட்டு தப்பி விட்டார். இப்படி 23 பேர் ரூ. 90 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ரூ. 5 லட்சம் கோடி கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு. இது அவர்களின் லட்சனம் என்றால், மாநில அரசோ மத்திய அரசுக்கு காலில் விழும் அரசாக இருக்கிறது. மத ஒற்றுமை உள்ள தமிழகத்தில் மத வெறியை தூண்ட மோடி அரசு துடிக்கிறது.

1948 ஜனவரி 30-ஆம் தேதியை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. இந்து வெறியர்கள் காந்தியை சுட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். அந்த நிமிடத்தில் திராவிட தலைவர்களான பெரியார் முதல் அண்ணா வரை பரிதாபப் பட்டார்கள், கோபப்பட்டார்கள், அதே காந்தியை 70 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2 மாதத்திற்கு முன்பு நரேந்திர மோடியின் ஆதரவில் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் உ.பி.யில் காந்தி பொம்மையை வெற்று துப்பாக்கியால் சுட்டு ரத்தம் சொட்ட சொட்ட வழிவது போல் வெறியை காட்டுகின்றனர். உலகம் முழுவதும் கோட்சேவின் சிலை வைப்போம் என்கிறார்கள்.

ஆனால் எங்களை மத துரோகிகள் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் பேசுகிறார்கள், நாங்கள் ஒற்றுமையை காப்பவர்கள், அதற்காக கலைஞரும் நாங்களும் செய்த சாதனைகள் ஏராளம். ஓடாத தேரை ஓட வைத்தவர் கலைஞர். அந்த வகையில் நாங்கள் எம்மதத்தையும் மதிப்பவர்கள்.

கஜா புயல் பாதித்தபோது மோடி வரவில்லை, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது ஒரு நாட்டில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தமிழகத்தை வேரறுக்க மோடி துடிக்கிறார், அந்த நிலை மாற வேண்டுமானால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற வேண்டும்" என்று தனக்கே உரிய பாணியில் வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT