ADVERTISEMENT

''சசிகலா மீது மரியாதையும், அபிமானமும் உண்டு''-விசாரணையில் ஓபிஎஸ்

02:01 PM Mar 22, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ, மார்ச் 21ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் நேற்று முதல் முறையாக ஆஜராகினார். அவரிடம் நேற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் மொத்தம் 78 கேள்விகள் ஜெயலலிதா தொடர்பாக கேட்கப்பட்டது. பல கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது, அதுபற்றி என்னிடம் யாரும் கூறவில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இன்று இரண்டாவது நாள் விசாரணைக்காக ஓபிஎஸ் மீண்டும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். இன்று ஆஜரான ஓபிஎஸ், 'இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். திருப்பரங்குன்றம், தஞ்சை, அவரக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ததும் ஜெயலலிதா தான். சிகிச்சை நேரத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவுகள் என்னென்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நேரத்தில் அவர் நலமாக இருப்பதாக சசிகலா ஒரு சிலமுறை கூறியிருந்தார். அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை' என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஓபிஎஸ்-சிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அதில் 'சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுமக்களிடம் சந்தேக கருத்து வலுத்ததால்தான் விசாரணை ஆணையம் வைக்க கோரிக்கை வைத்தேன். மற்றபடி ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை' என ஓபிஎஸ் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT