ADVERTISEMENT

“பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் அதை வேடிக்கை பார்க்கமாட்டோம்” - ஈபிஎஸ்

12:06 AM Jan 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரும்பு கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது தொடர்ந்தால் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் செய்ய இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “2023ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்தது.

இதன்பின் தைப் பொங்கலுக்கு, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கியதைப் போல், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேபோல், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர்.

இந்த அரசு எங்களது கோரிக்கையை அடுத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33/- ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33/- ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு அறிவித்த கரும்புக்கான முழுத் தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த அரசை எச்சரிக்கை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT